மாவட்ட செய்திகள்

நெல்லை-தென்காசியில் தொடர் மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; 65 வீடுகள் சேதம் - தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் + "||" + Tirunelveli, Tenkasi in the rain Flooding of settlements 65 homes damaged

நெல்லை-தென்காசியில் தொடர் மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; 65 வீடுகள் சேதம் - தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

நெல்லை-தென்காசியில் தொடர் மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; 65 வீடுகள் சேதம் - தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்
நெல்லை-தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் 65-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. வெள்ளத்தை வெளியேற்றக்கோரி தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லை, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும், அணைகள் நிரம்பியதால் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடந்த 30-ந் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேற்று முன்தினமும் இது நீடித்தது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் உள்ள சேரன்மாதேவி, மேலநத்தம், முண்டந்துறை உள்ளிட்ட ஊர்களில் தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மழை குறைந்ததால், அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. எனவே, தாமிரபரணி ஆற்றில் நேற்று வெள்ளம் குறைந்தது. இதனால் தண்ணீரில் மூழ்கியிருந்த தரைப்பாலங்களில் வெள்ளம் வடிந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது. மேலும், வெள்ளம் குறைந்ததால் குறுக்குத்துறை முருகன் கோவில் வெளியே தெரிவதுடன், அங்கு செல்லும் நடைபாதையில் அமலைச்செடிகள் குவிந்துள்ளன.

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம், வண்ணார்பேட்டை பகுதிகளில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் நேற்று தங்கள் வீடுகளுக்கு திரும்பினார்கள். இதனால் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஆனால், தாழ்வான பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாமல் உள்ளது.

நெல்லை மாநகர பகுதியில் நேற்று காலையில் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. அதன்பிறகு வெயில் அடித்தது. கடந்த சில தினங்களாக பெய்த கனமழையையொட்டி நெல்லை மாநகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கின்றன. நெல்லை ராமையன்பட்டி அரசு புதுகாலனி, சிவாஜி காலனி, வேப்பங்குளம் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அரசு புதுகாலனியில் கடந்த 3 நாட்களாக மக்கள் வெள்ளநீரில் தவித்து வருகின்றனர்.

நேற்று காலையில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அந்த பகுதி மக்கள் தண்ணீரில் இறங்கி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வேப்பங்குளம் பகுதியில் பஞ்சாயத்து ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரி செய்து தண்ணீரை வெளியேற்றினார்கள்.

நெல்லை உடையார்பட்டியில் உள்ள ரெங்கநாதர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது. பள்ளி மாணவ-மாணவிகள் அந்த தண்ணீருக்குள் நடந்து வகுப்பறைக்கு சென்றனர். தண்ணீர் தேங்கி இருந்ததால் பெற்றோர்கள் பலர் தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப் படுத்தினார்கள்.

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் வடபகுதி, மனகாவலன்பிள்ளைநகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இந்த தொடர் மழையால் நெல்லை மாநகர் பகுதியில் 7 வீடுகளும், நெல்லை மாவட்டத்தில் 43 வீடுகளும் என மொத்தம் 50 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்து உள்ளன.

இதேபோல் தென்காசி மாவட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. இந்த கனமழையால் நெல்லை-தென்காசி மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள், வாழைகள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நகர்புறங்களில் உள்ள சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் மாறிவிட்டன. அந்த சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மழை பெய்யவில்லை. இதன் காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 565 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 141.65 அடியாக இருந்தது. அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 560 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 146.90 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 94.80 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 27.50 அடியாகவும், நம்பியாறு அணையின் நீர்மட்டம் 16.50 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 40 அடியாகவும் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும், ராமநதியின் நீர்மட்டம் 82 அடியாகவும், கருப்பாநதியின் நீர்மட்டம் 70.21 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 132.22 அடியாகவும் உள்ளது. மழை பெய்யாததால் இந்த அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து விட்டது. இருந்தபோதும் இந்த 5 அணைகளும் நிரம்பிய நிலையில் உள்ளதால், அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதா நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம்
நெல்லை, தென்காசியில் குடியுரிமை மசோதாவை கிழித்து தி.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
2. 2 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் வரை இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி
2 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர் வரை இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
3. நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம்
நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.
4. நெல்லை, தென்காசியில் தொடர் மழையால் 356 குளங்கள் நிரம்பின - விவசாய பணிகள் மும்முரம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த பலத்த மழையால் 356 குளங்கள் நிரம்பின. இதனால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
5. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக பெய்த மழையால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து உள்ளது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.