ஜெயில் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் முருகன் வேலூர் கோர்ட்டில் ஆஜர்


ஜெயில் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் முருகன் வேலூர் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 7:56 PM GMT)

ஜெயில் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கில் முருகன் வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் முருகன் அறையில் இருந்து ஆன்ட்ராய்டு செல்போன் மற்றும் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து அவர் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து முருகனுக்கு ஜெயிலில் வழங்கப்பட்ட சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து முருகன் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக பெண்கள் ஜெயிலில் அவருடைய மனைவி நளினியும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு பின்னர் இருவரும் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

முருகன் அறையில் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்ட வழக்கின் விசாரணை வேலூர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதையொட்டி முருகன் நேற்று மதியம் 12 மணியளவில் ஜெயிலில் இருந்து வேலூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலு தலைமையில் பலத்த பாதுகாப்புடன் வேனில் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து அவர் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாக மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) நிஷா உத்தரவிட்டார். அதையடுத்து முருகன் மீண்டும் வேலூர் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Next Story