நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நாமக்கல் வழியாக இயக்கம் அரசியல் கட்சியினர் உற்சாக வரவேற்பு


நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நாமக்கல் வழியாக இயக்கம் அரசியல் கட்சியினர் உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 8:35 PM GMT)

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முதல் முறையாக நாமக்கல் வழியாக இயக்கப்பட்டது. இந்த ரெயிலுக்கு தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாமக்கல்,

கரூர்-ஈரோடு-சேலம் மார்க்கமாக இயக்கப்பட்டு வந்த 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களை கரூர்-நாமக்கல்-சேலம் மார்க்கமாக இயக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட ரெயில் பயணிகளும், பல்வேறு அமைப்பினரும், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதே கோரிக்கையை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜூம் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் டிசம்பர் 2-ந் தேதி முதல் நாகர்கோவில்-மும்பை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில், திருநெல்வேலி மும்பை தாதர் சாளுக்கியா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 2 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இரு மார்க்கத்திலும் கரூர்-நாமக்கல்-சேலம் மார்க்கம் வழியாக இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதன்படி நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் வாரந்தோறும் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், திருநெல்வேலி-மும்பை தாதர் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் வாரந்தோறும் திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமைகளிலும் நாமக்கல் வழியாக இயக்கப்பட உள்ளது.

உற்சாக வரவேற்பு

முதல் முறையாக நேற்று நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நாமக்கல் வழியாக இயக்கப்பட்டது. இந்த ரெயில் நாமக்கல் ரெயில் நிலையத்தை நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரெயிலுக்கு முன்னாள் மத்திய மந்திரி காந்திசெல்வன் தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்தும், பூக்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பயணிகளுக்கு இனிப்பும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், மாநில விவசாய அணி இணை செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் அசோகன், பொருளாளர் மணி, துணை செயலாளர் செல்வராஜ், தி.மு.க. நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், ராசிபுரம் நகர வளர்ச்சி மன்ற தலைவர் பாலு மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story