சேலத்தில் துணிகரம்: டாக்டர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


சேலத்தில் துணிகரம்: டாக்டர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Dec 2019 3:45 AM IST (Updated: 3 Dec 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் டாக்டர் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சூரமங்கலம்,

சேலம் நரசோதிப்பட்டி ஆர்த்தி நகரை சேர்ந்தவர் டாக்டர் திலக்(வயது 45). இவர் அதே பகுதியில் குழந்தைகள் நல கிளினிக் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் ஒருவருடைய வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று காலை அவருடைய வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் வசிப்பவர்கள் இதுகுறித்து உடனடியாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

30 பவுன் நகை கொள்ளை

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், திலக் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. அவர் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து சென்னையில் உள்ள டாக்டர் திலக்கிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அவர் வந்த பின்னர் மேலும் விவரங்கள் தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

டாக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story