சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து புகார் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து புகார் பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:45 PM GMT (Updated: 2 Dec 2019 10:18 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு சென்றனர்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். இதையொட்டி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் தீவிரமாக சோதனை நடத்திய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களின் மனுக்களை அலுவலர்கள் வாங்கி படித்து அதனை கணினியில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

திடீரென ரத்து

இந்தநிலையில், காலை 10 மணிக்கு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதாவது, ஊரக பகுதிகளுக்கு வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்றும், இதனால் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் மனுக்கள் பெறுவதற்கு தயாராக இருந்த அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டனர். பின்னர், பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதை நிறுத்திக்கொண்டு அதற்கு பதில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்களை அளிக்க வசதியாக ஒரு புகார் பெட்டி வைக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தவர்கள், அந்த பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். ஒருசிலர் கலெக்டரை பார்க்க முடியாமல் அந்த புகார் பெட்டியில் மனுக்களை போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காணமுடிந்தது.

உள்ளாட்சி தேர்தல் முடிந்தவுடன் அதன்பிறகு மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக நடைபெறாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story