கூட்டணி குறித்து திறந்த மனதுடன் பரிசீலிப்போம்: 9-ந் தேதிக்கு பிறகு கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு இருக்காது - காங். மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் பேட்டி


கூட்டணி குறித்து திறந்த மனதுடன் பரிசீலிப்போம்: 9-ந் தேதிக்கு பிறகு கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு இருக்காது - காங். மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் பேட்டி
x
தினத்தந்தி 3 Dec 2019 12:13 AM GMT (Updated: 3 Dec 2019 12:13 AM GMT)

9-ந் தேதிக்கு பிறகு கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு இருக்காது என்றும், கூட்டணி குறித்து திறந்த மனதுடன் பரிசீலிப்போம் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தொலைவில் வைக்க வேண்டும் என்பது காங்கிரசின் நோக்கம். அதற்காக நாங்கள் எல்லா வகையான, சாதகமான அம்சங்களையும் ஆராய்வோம். ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைப்பது உள்பட எல்லா விஷயங்களையும் காங்கிரஸ் திறந்த மனதுடன் பரிசீலிக்கும்.

15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி. கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு சென்ற தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். பா.ஜனதா அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. மத்திய-மாநில அரசுகள் எந்த வளர்ச்சி பணிகளையும் செய்யவில்லை.

பணம், அதிகாரத்திற் காக கட்சி தாவுவது, ஜனநாயகத்திற்கு விரோதமானது. கர்நாடக அரசியலை தூய்மைப்படுத்த மக்களுக்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றால், அது நாட்டுக்கு தவறான செய்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும். கர்நாடக மக்கள் சிந்தித்து, தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

பெலகாவியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி, மும்பையில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அவர் மக்களின் கஷ்டங்களை தீர்க்கும் பணியை செய்யவில்லை.

கூட்டணி அரசை கவிழ்க்க ரமேஷ் ஜார்கிகோளி குதிரை பேரத்தில் ஈடுபட்டார். எடியூரப்பா அரசுக்கு மக்களின் முழு ஆதரவு இல்லை. குதிரைபேரம் மற்றும் குறுக்கு வழி மூலமாக எடியூரப்பா முதல்-மந்திரி ஆகியுள்ளார். காங்கிரசின் முதுகில் குத்தியவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு கே.சி.வேணு கோபால் கூறினார்.

Next Story