டெல்டா பகுதியில் 71 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின - விவசாயிகள் கவலை


டெல்டா பகுதியில் 71 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின - விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 4:21 PM GMT)

வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் டெல்டா பகுதியில் சுமார் 71 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

காட்டுமன்னார்கோவில்,

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதனால் காவிரியின் கடைமடை பகுதியாக இருந்து வரும் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியில் 47 அடியை எட்டி இருக்கிறது. ஏரிக்கு தொடர்ந்து அதிகப்படியான நீர் வரத்து இருந்து வருவதால், வெள்ளியங்கால் ஓடை மூலமாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியும், மணவாய்க்கால் மூலமாக வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் லால்பேட்டை, வடக்கு கொளக்குடி, மா.கொளக்குடி, எள்ளேரி, எள்ளேரி கிழக்கு, சர்வராஜன்பேட்டை, வீரநத்தம், திருநாறையூர், எடையார், சிறகிழந்தநல்லூர், நெய்வாசல், தொடுக்குழி, விளத்தூர், நெடும்பூர், குமராட்சி, கீழவன்னியூர், நந்திமங்கலம் உள்பட 75-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. மேலும் இந்த பகுதியில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கடந்த 5 நாட்களாக வயல்களை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால், சுமார் 40 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருக்கிறது.

இதேபோல் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், ஸ்ரீமு‌‌ஷ்ணம் பகுதியில் இருந்து வரும் மழைநீர் வென்னங்குழி, பாப்பாக்குடி ஓடைகளில் அதிகளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வீராநந்தபுரம், சப்பானி குட்டை, கண்டமங்கலம், குறுங்குடி, மடப்புரம், வீராணநல்லூர், நாட்டார்மங்கலம், பட்டிக்கொல்லை, திருமூலஸ்தானம், உத்திரசோலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களும், அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், சம்பா நெற்பயிர்கள் பூக்கும் தருவாயில் இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. இதனால் கதிர் வந்தாலும், கறுப்பு நிறத்தில் தான் நெல்மணிகள் வரும். அதேபோல், தண்ணீரை வடிய வைக்கவும் வழியில்லாமல் இருப்பதால், முழுவதும் அழுகி போகும் நிலை தான் நீடிக்கிறது. விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரைக்கும் செலவு செய்து பயிர் செய்திருந்தனர். இவ்வாறு இருந்தும் பயிர்கள் அழுகும் நிலையில் இருப்பதால், விவசாயிகளை மிகவும் வேதனையடைய செய்துள்ளது. விவசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீராணம் ஏரியை பொறுத்தவரை நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதன் நீர்மட்டம் 40 அடிக்கு மேல் நீர் இருப்பு இல்லாமல் தான் வைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளாக ஏரியின் நீர்மட்டம் 40 அடிக்கும் மேல் இருப்பதினால் தான், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதேபோன்று சிதம்பரம் பகுதியில் வீராணம் ஏரியில் இருந்து வெள்ளியங்கால் ஓடையில் வெளியேற்றப்படும் தண்ணீர், சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் கலந்து அதிகளவில் ஓடுகிறது. இந்த தண்ணீர், கரையோரம் உள்ள விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களை சூழ்ந்து நிற்கிறது. அதன்படி, அத்திப்பட்டு, ஆளம்பாடி, மணல் மேடு, வடக்குமாங்குடி, கத்திரிமேடு, தெற்கு மாங்குடி, நந்திமங்களம், நலம்பூத்தூர், கருப்பூர், வையூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

தற்போது நன்கு கதிர்கள் வந்த நிலையில், நெல் மணிகள் விளைந்து வந்தன. இந்த சூழ்நிலையில் மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. இதை உடனடியாக வடிய வைக்கவும் முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Next Story