சிவகங்கை, திருப்பத்தூர் பகுதிகளில், தொடர்மழையால் வீடுகள் சேதம் - சுவர் இடிந்து விழுந்து 3 பேர் காயம்


சிவகங்கை, திருப்பத்தூர் பகுதிகளில், தொடர்மழையால் வீடுகள் சேதம் - சுவர் இடிந்து விழுந்து 3 பேர் காயம்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:15 PM GMT (Updated: 3 Dec 2019 4:39 PM GMT)

சிவகங்கை, திருப்பத்தூர் மற்றும் எஸ்.புதூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை பகுதியில் கடந்த சில தினங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் உடையார் சேர்வை ஊரணி பகுதியை சேர்ந்த தொழிலாளியான ராஜேந்திரன்(வயது56) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது ராஜேந்திரன், அவரது மனைவி வள்ளி (48), வள்ளியின் தோழியான பக்கத்து வீட்டு முத்துலட்சுமி(40) ஆகியோர் வீட்டினுள் இருந்தனர். வீட்டின் மேலே இருந்த ஓடுகள் அவர்கள் மீது விழுந்தன. இடிபாடுகளில் சிக்கிய ராஜேந்திரன், வள்ளி மற்றும் முத்துலட்சுமி ஆகியோர் காயம் அடைந்தனர்.இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் 3 பேைரயும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சிவகங்கை தாசில்தார் மைலாவதி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். இதுகுறித்து நகர் சப்-இன்ஸ்பெக்டர் வாசிவம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதேபோல் திருப்பத்தூர் அருகே புதுப்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் வீரசுப்பு. இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கமலம்(வயது69). இவர் புதுப்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக இவரது ஓட்டு வீடு இடிந்து விழுந்தது. அந்த நேரம் கமலம் வீட்டில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. சேதமடைந்த வீட்டை வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர் சின்னையா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனா்.

இதேபோல் எஸ்.புதூர் அருகே உள்ள தோணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செவந்தி மனைவி லெட்சுமி (65). இவர் கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், முதியோர் உதவித்தொகை பெற்று கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் இவரது ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் மழையால் இடிந்து விழுந்தது. அப்போது லெட்சுமி வீட்டில் இல்லாததால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

Next Story