மானாமதுரை பகுதியில் தொடர் மழை: செங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு - இழப்பீடு வழங்க வலியுறுத்தல்


மானாமதுரை பகுதியில் தொடர் மழை: செங்கல் உற்பத்தி கடும் பாதிப்பு - இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Dec 2019 3:45 AM IST (Updated: 3 Dec 2019 10:14 PM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

மானாமதுரை, 

மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. சுற்று வட்டார கண்மாய்களில் இருந்து சவடு மண் எடுக்கப்பட்டு, செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு செங்கல் சூளைகளிலும் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் செங்கற்கள் வரை தயாரிக்கப்படுகிறது. செங்கல் தயாரிக்கப்பட்டு வெயிலில் காயவைக்கப்பட்ட பின் சூளையில் வைத்து சுடப்படுகின்றன. செங்கற்களை வெயிலில் காயவைத்த பின்தான் சூளையில் வைக்க முடியும், மேலும் சூளையில் வைத்து செங்கற்களை சுடுவதற்கு விறகுகளும் தேவைப்படும், மழை காரணமாக காய்ந்த விறகுகளும் கிடைக்கவில்லை. காயவைக்கப்பட்ட செங்கற்களும் வெயில் இல்லாததால் மழையில் கரைந்து வீணாகிவிட்டன. தொடர் மழை காரணமாக 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலையிழந்து வறுமையில் வாடி வருகின்றனர்.

ஒவ்வொரு செங்கல் சூளை களிலும் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்தில் நெல், வாழை போன்றவை மழை காரணமாக சேதமடைந்தால் வருவாய்த்துறையினர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரியும் செங்கல் சூளையில் பாதிப்பு ஏற்பட்டால் இழப்பீடும் கிடையாது, தொழிலாளர்களுக்கு உதவி தொகையும் வழங்கப்படுவதும் கிடையாது.

இதுகுறித்து கிளங்காட்டூரில் தனியார் செங்கல் சூளையில் பணிபுரியும் சேகர் என்பவர் கூறுகையில், எங்கள் சூளையில் செங்கற்களை தயாரித்து திருச்சி, மதுரை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகிறோம். மழை காரணமாக தற்போது லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதுடன், தொழிலாளர்களுக்கும் வேலை இல்லை. அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டால் ஓரளவிற்கு எங்களால் சமாளிக்க முடியும் என்றார்.

Next Story