ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் பல பெற்ற கொம்பன் காளையை கோவிலுக்கு நேர்ந்துவிட்ட உரிமையாளர்


ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் பல பெற்ற கொம்பன் காளையை கோவிலுக்கு நேர்ந்துவிட்ட உரிமையாளர்
x
தினத்தந்தி 3 Dec 2019 10:45 PM GMT (Updated: 3 Dec 2019 4:50 PM GMT)

ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசுகள் பல பெற்ற கொம்பன் காளையை அதன் உரிமையாளர் கோவிலுக்கு நேர்ந்து விட்டுள்ளார். இதனால் அந்த காளையை அடக்க நினைத்த மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

லால்குடி,

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் காத்தான். வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவை திருச்சி மாவட்ட செயலாளரான காத்தான் பாரம்பரியமாக 10-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இதில் கொம்பன் என்ற காளையும் அடங்கும்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற பல ஜல்லிக்கட்டுகளில் களம் கண்ட இந்த காளையை இதுவரை எந்த ஒரு மாடுபிடி வீரரும் அடக்கியது கிடையாது. இதனால் போட்டிகளில் இந்த காளை ஏராளமான பரிசுகளை பெற்றுள்ளது. இதனால் இந்த காளையை அடக்குவதே மாடுபிடி வீரர்களின் கனவாக இருந்து வந்தது.

உள்காயம்

மேலும் திருச்சி முழுவதும் கொம்பன் காளைக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். முகநூலில் கொம்பன் காளைக்கு ‘கொம்பன் குடும்பத்தினர்’ என்ற பக்கம் உருவாக்கிய ரசிகர்கள், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் அந்த காளையின் வீடியோ மற்றும் புகைப்படங்களை அதில் பதிவேற்றி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கொம்பன் காளையின் ஒரு காலில் உள்காயம் ஏற்பட்டது. இதனால் அது காலை தாங்கித்தாங்கி நடந்தது. காளைக்கு பல்வேறு சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியவில்லை. இதனால் வேதனையடைந்த கொம்பன் காளையின் உரிமையாளர், காளையை கோவிலுக்கு நேர்ந்து விட முடிவெடுத்தார்.

கோவிலுக்கு நேர்ந்துவிட்ட உரிமையாளர்

அதன்படி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு கொம்பன் காளையை நேர்ந்துவிட்டு விட்டு காத்தான் கண்ணீருடன் திரும்பினார். பிள்ளை போல் வளர்த்த காளை இல்லாததால் காத்தானின் குடும்பம் சோகத்தில் மூழ்கி உள்ளது.

கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்டதால், கொம்பன் காளை இனி ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறாது. இதனால் அந்த காளையை வருகிற ஜல்லிக்கட்டு போட்டியில் அடக்கமுடியாது என்பதை கேள்விப்பட்ட மாடுபிடி வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story