தொடர்மழையின் காரணமாக கீரனூரில் உள்ள சிவன் கோவிலில் தண்ணீர் புகுந்தது


தொடர்மழையின் காரணமாக கீரனூரில் உள்ள சிவன் கோவிலில் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 4:55 PM GMT)

தொடர் மழையின் காரணமாக கீரனூரில் உள்ள சிவன் கோவிலில் தண்ணீர் புகுந்தது. இதனால் பூஜைகள் நிறுத்தப்பட்டு உள்ளன.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 29-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 3 நாட்கள் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நேற்று முன்தினம் வரை பெரியார்நகர் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வடியவில்லை. இதனால் பெரியார்நகரில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறிது நேரம் மட்டும் மழை பெய்ததால், தற்போது பெரியார்நகரில் உள்ள சாலையில் மழைநீர் செல்லவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வடிந்தது.

ஓட்டுவீடு இடிந்தது

இந்நிலையில் நேற்று காலையில் புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டார். புதுக்கோட்டையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், அரசு மகளிர் கலை கல்லூரி, ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல பகுதிகளில் தேங்கி உள்ள மழைநீர் இன்னும் வடியவில்லை.

தொடர் மழையின் காரணமாக போஸ்நகர் 4-ம் வீதியில் கருப்பையா மனைவி ராக்கம்மாளுக்கு சொந்தமான ஓட்டுவீடு இடிந்து விழுந்தது. இதில் ஒரு ஆடு பரிதாபமாக இறந்தது. வீட்டில் இருந்தவர்கள் அதிர்‌‌ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினார்கள்.

அன்னவாசல் பகுதியில் தொடர் மழையால் அன்னவாசல் கொடிக்கல் தெருவில் உள்ள கார்த்திக் என்பவரது வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் அதிர்‌‌ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

மழையளவு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் ஆதனக்கோட்டை 15, பெருங்களூர் 3.20, புதுக்கோட்டை 4, ஆலங்குடி 18, கந்தர்வகோட்டை 17, கறம்பக்குடி 8.80, மழையூர் 8.60, கீழாநிலை 15.20, திருமயம் 10.80, அரிமளம் 3.80, அறந்தாங்கி 12.70, ஆயிங்குடி 27.20, நாகுடி 34.60, மீமிசல் 54.80, ஆவுடையார்கோவில் 21, மணமேல்குடி 48, கட்டுமாவடி 20, இலுப்பூர் 17, குடுமியான்மலை 54, அன்னவாசல் 5, விராலிமலை 12.90, உடையாளிப்பட்டி 3.40, கீரனூர் 36, பொன்னமராவதி 1, காரையூர் 9 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக மீமிசலில் 54.80 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக பொன்னமராவதியில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

கோட்டைப்பட்டினம்

இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளான கோட்டைப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள அனைத்து கண்மாய்கள், குளங்கள், நீர் நிலைகள் போன்றவை நிரம்பி வழிகின்றன. இதன் காரணமாக பல இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல பள்ளி வளாகங்களிலும் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் விவசாய நிலங்களிலும் மழை நீர் சூழ்ந்து உள்ளதால், பயிர்கள் மழை நீரில் மூழ்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

கீரனூர்

கீரனூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக கீரனூர் பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பின. இவ்வாறு நிரம்பிய குளங்களில் உள்ள உபரிநீர் சாலையில் பெருக் கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மேலும் தொடர் மழையின் காரணமாக கீரனூர் சிவன் கோவிலில் மழைநீர் புகுந்தது. கோவிலில் உள்ள நுழைவுவாயில், நந்தி சிலை உள்ள பகுதி போன்ற பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் சுவாமிக்கு செய்ய வேண்டிய பூஜைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. மேலும் இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் மோட்டார்கள் உதவியுடன் கோவிலில் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story