மாவட்ட செய்திகள்

கே.சி.வேலி திட்டத்தின் கீழ்: பெங்களூருவில் இருந்து லட்சுமி சாகரா ஏரிக்கு நுரை பொங்கி வரும் தண்ணீர் - மக்கள் அதிர்ச்சி + "||" + From Bangalore To Lakshmi Sagara Lake Foam raging water Shock people

கே.சி.வேலி திட்டத்தின் கீழ்: பெங்களூருவில் இருந்து லட்சுமி சாகரா ஏரிக்கு நுரை பொங்கி வரும் தண்ணீர் - மக்கள் அதிர்ச்சி

கே.சி.வேலி திட்டத்தின் கீழ்: பெங்களூருவில் இருந்து லட்சுமி சாகரா ஏரிக்கு நுரை பொங்கி வரும் தண்ணீர் - மக்கள் அதிர்ச்சி
கே.சி.வேலி திட்டத்தின் கீழ் பெங்களூருவில் இருந்து வரும் தண்ணீர் லட்சுமி சாகரா ஏரியில் நுரை பொங்கி வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோலார் தங்கவயல்,

பெங்களூருவில் சேரும் கழிவுநீர் மற்றும் ரசாயனம் கலந்த தண்ணீரை சுத்தம் செய்து கோலார் மாவட்டத்துக்கு அனுப்ப கே.சி.வேலி திட்டம் கொண்டு வரப்பட்டது. ரூ.1,400 கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தால் கோலார் மாவட்டத்தில் உள்ள 126 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் 35-க்கும் அதிகமான டேங்கர்களிலும் இந்த தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த தண்ணீர் மூலம் கோலார் மாவட்டத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


இந்த நிலையில், கே.சி.வேலி திட்டத்தில் கோலாரில் உள்ள ஏரிகளில் நிரப்பப்படும் தண்ணீர் சுத்தமானதாக இல்லை என்றும், கழிவுநீராக வருவதாகவும் புகார்கள் எழுந்தது. இதனால் கர்நாடக ஐகோர்ட்டு இந்த திட்டத்துக்கு தற்காலிகமாக தடை விதித்தது. இதையடுத்து மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இதனால் அதிகாரிகள் இந்த தண்ணீரை ஆய்வு செய்தனர். அப்போது அந்த தண்ணீர் சுத்தமாக இருப்பதாக அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். இதன்காரணமாக கே.சி.வேலி திட்டத்துக்கு விதித்த தற்காலிக தடையை நீக்கி உத்தரவிட்டது.

அதன்பின்னர் பெங்களூருவில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு செய்து கோலார் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கே.சி.வேலி திட்டத்தின் கீழ் கோலார் தாலுகா கே.நரசாப்புராவில் உள்ள லட்சுமி சாகராவுக்கு வந்த தண்ணீர் நுரை பொங்கி வருகிறது. இதனை பார்த்து அந்தப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த தண்ணீர் கழிவுநீராக வருவதாகவும் தெரிகிறது. அத்துடன் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த தண்ணீர் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூரு பெல்லந்தூர் ஏரியில் வருவது போன்று லட்சுமிசாகரா ஏரியிலும் நுரை பொங்கி வருகிறது. அந்த நுரை காற்றில் பறந்து சாலையில் செல்பவர்கள் மீது விழுகிறது.

இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள் கூறுகையில், பெங்களூருவில் இருந்து கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து கே.சி.வேலி திட்டத்தில் கோலார் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் 2 முறை சுத்திகரிப்பு செய்து கோலார் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் பெங்களூரு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் கழிவுநீரை சரியாக சுத்திகரிப்பு செய்யாமல் தண்ணீரை கோலாருக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

இந்த தண்ணீர் நுரையுடன் வருகிறது. அத்துடன் பயங்கர துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்துக்கு கூட பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அதிகாரிகள் அலட்சியத்தால் தான் இந்த தவறு நடந்துள்ளது. கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்து கோலாருக்கு அனுப்ப வேண்டும். இல்லை என்றால் அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள் லட்சுமி சாகரா ஏரிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் ஏரியின் தண்ணீரை ஆய்வுக்காக எடுத்து சென்றுள்ளனர்.