வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க தயார் நிலையில் 21 சிறப்பு மீட்பு கமாண்டோ வீரர்கள் - மாவட்ட தீயணைப்பு அலுவலர் தகவல்


வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க தயார் நிலையில் 21 சிறப்பு மீட்பு கமாண்டோ வீரர்கள் - மாவட்ட தீயணைப்பு அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2019 3:45 AM IST (Updated: 4 Dec 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

வெள்ள பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்டு பாதுகாக்க 21 சிறப்பு மீட்பு கமாண்டோ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.

வேலூர், 

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை தீவிரமாக பெய்தது. அரக்கோணத்தில் பெய்த பலத்த மழையால் 4 வீடுகள் சேதமடைந்தன. இந்த நிலையில் மழையின் தீவிரம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதனால் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிகளை எதிர்கொள்ள தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்க சிறப்பு மீட்பு கமாண்டோ வீரர்கள் குழுவை உருவாக்க வேண்டும் என்றும் தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து வடமேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு வீரர்கள் வெள்ள மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று வடமேற்கு மண்டல தீயணைப்பு அலுவலர் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் வேலூர் மாவட்டத்தில் பருவமழையால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்டு பாதுகாக்க 21 பேர் கொண்ட சிறப்பு மீட்பு கமாண்டோ வீரர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினர் வெள்ள பாதிப்பு, கட்டிட இடுபாடுகள், மரங்கள் சாய்ந்து விழுதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு பாதுகாப்பான இடத்தில் அழைத்து செல்வதற்காக மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

அதேபோன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 16 தீயணைப்பு நிலையங்களில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்களுக்கும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை முடியும்வரை தீயணைப்பு வீரர்கள் விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றால் தேவையான பொருட்களுடன் பொதுமக்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்துக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் மின்கம்பத்தின் அருகில் செல்லவோ, அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை தொடவோ கூடாது.

பொதுமக்கள் அவசர உதவிக்கு 0416- 2229101, 9445086112 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

Next Story