வேலூரில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
வேலூரில் உடல்நலக்குறைவால் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டது. இதயம் சென்னைக்கு அனுப்பப்பட்டது.
வேலூர்,
வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டியை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவர் வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி வேளாங்கன்னி (வயது 39). இவர்களின் மகள் ஷாலினி (19), ஆந்திர மாநிலம் திருப்பதியில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த வேளாங்கன்னி கடந்த மாதம் 30-ந் தேதி சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் வேளாங்கன்னி மூளைச்சாவு அடைந்தார்.
இதனை உறுதி செய்த டாக்டர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அதைக்கேட்டு கணவர் மற்றும் மகள் கதறி அழுதனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் 2 பேரும் வேளாங்கன்னியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
அதைத்தொடர்ந்து நவீன தொழில்நுட்பம் மூலம் வேளாங்கன்னியின் இதயம், சிறுநீரகங்கள் ஆகிய உறுப்புகள் எடுக்கப்பட்டன.
அதில், இதயம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. சிறப்பு ஆம்புலன்சின் மூலம் இதயம், சிறுநீரகம் ஆகியவை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story