மகன் இறந்த துக்கம் தாங்காமல்: மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு


மகன் இறந்த துக்கம் தாங்காமல்: மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 10:15 PM GMT (Updated: 3 Dec 2019 7:20 PM GMT)

மகன் இறந்த துக்கம் தாங்காமல் மேம் பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் துரித நடவடிக்கையால் அவர் உயிர்பிழைத்தார்.

தானே,

தானே அருகே உள்ள கல்வாவை சேர்ந்தவர் தானாஜி காம்ளே (வயது50). இவரது மகன் 4 மாதங்களுக்கு முன்பு ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். அன்று முதல் தானாஜி காம்ளே மிகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் தற்கொலை செய்ய முடிவு செய்த தானாஜி காம்ளே நேற்று காலை கல்வா சிவாஜி நாக்கா அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் மீது ஏறினார்.

பின்னர் தான் கொண்டு வந்திருந்த துணியை மேம்பாலத்தில் உள்ள ஒரு தூணில் கட்டிவிட்டு மறுமுனையை தனது கழுத்தில் கட்டிக்கொண்டு நின்றார்.

இதை கீழே சாலையில் சென்றுகொண்டிருந்த மக்கள் பார்த்து சத்தம்போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே யாரும் எதிர்பாராத வகையில் அவர் தூக்கு கயிற்றில் தொங்கினார். ஆனால் தூக்கு கயிற்றை இரண்டு கையால் இறுக பிடித்து கொண்டதால் அவரது கழுத்து இறுகவில்லை.

அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்த அவரை அங்கு கூடியிருந்த மக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர். மேலும் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.

இதற்கிடையே அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பாலத்தில் ஒருவர் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக செயல்பட்டு அங்கு நின்று கொண்டிருந்த கிரேனை கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கிரேனை தானாஜிகாம்ளே காலுக்கு அடியில் உயர்த்தினர். இதனால் அவர் அதில் நின்று உயிர் பிழைத்தார்.

இதையடுத்து போலீசார் அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தானாஜி காம்ளேவுக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தற்கொலை முயற்சி சம்பவம் சமூக வலை தளத்தில் வைரலாகி உள்ளது.

Next Story