‘தமிழ்நாடு’ என்று பெயர் வர காரணமானவர், சி.பா.ஆதித்தனார் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த சொற்பொழிவில் கு.ஞானசம்பந்தன் பேச்சு


‘தமிழ்நாடு’ என்று பெயர் வர காரணமானவர், சி.பா.ஆதித்தனார் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த சொற்பொழிவில் கு.ஞானசம்பந்தன் பேச்சு
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 7:35 PM GMT)

‘தமிழ்நாடு’ என்று பெயர் வர காரணமானவர், சி.பா.ஆதித்தனார் என தஞ்சை தமிழ்ப்பல் கலைக்கழகத்தில் நடந்த அறக்கட்டளை சொற்பொழிவில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இலக்கியத்துறை சார்பில் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சொற்பொழிவு நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்ப்பல்கலைக்கழக மொழிப்புல தலைவர் காமராசு தலைமை தாங்கினார். இலக்கியத்துறை தலைவர் தேவி வரவேற்றார்.

இதில் மதுரை தியாகராசர் கல்லூரி பேராசிரியரும், பட்டிமன்ற நடுவருமான கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு ‘ஊடகமே உலகம்’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

பாமர மக்களின் சிந்தனை

பாமர மக்களின் சிந்தனையை உள்வாங்கியவர் சி.பா.ஆதித்தனார். மக்களுக்கு புரியும் மொழியில் எழுத வேண்டும். தமிழை கொச்சைப்படுத்தக்கூடாது. சுருக்கமாக அதுவும் குழப்பம் இல்லாமல் எழுத வேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்தவர் ஆதித்தனார். மதுரையில் தினசரி பத்திரிகையை தொடங்கியபோது காகித பற்றாக்குறை நிலவியது. யாரும் செய்யாத வேலையை ஆதித்தனார் செய்தார். வைக்கோலை வாங்கி வந்து கூழாக மாற்றி காகிதத்தை தயாரித்தார்.

‘தினத்தந்தி’ பத்திரிகையின் வளர்ச்சி ஆச்சர்யமானது. எல்லோரையும் ஈர்க்கக்கூடியதாக ‘தினத்தந்தி’ இருக்கிறது. சாதாரண ஆட்களையும் படிக்க வைத்தது ‘தினத்தந்தி’. பள்ளிக்கூடம், பல்கலைக்கழகம் சொல்லி கொடுக்க வேண்டியதை ‘தினத்தந்தி’ சொல்லி கொடுத்தது என்று சொன்னால் சி.பா.ஆதித்தனாரின் சிந்தனை எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு என்று பெயர் வர காரணமானவர்

சபாநாயகராக சி.பா.ஆதித்தனார் இருந்தபோது திருக்குறளை சொல்லிவிட்டு சட்டசபையை ஆரம்பிக்கும் நடைமுறையை கொண்டு வந்தார். 1960-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோது சென்னை மாகாணம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் என முதன் முதலில் மனு கொடுத்தவர் ஆதித்தனார். பின்னாளில் அது நிறைவேறுவதற்கு காரணமாகவும் இருந்தவர்.

பட்டிமன்றம்

சி.பா.ஆதித்தனார் சாதித்துவிட்டு போன வி‌‌ஷயங்களை நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். அவரது புகழுக்கு காரணம் அரசியல் செயல்பாடா? அல்லது இதழியல் செயல்பாடா? என்று பட்டிமன்றம் வைக்கலாம்.

நல்ல முதலாளியாக, தமிழ் உணர்வுடையவராக, நல்ல படிப்பாளியாக, பிறரையும் தமிழ் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவராக சி.பா.ஆதித்தனார் இருந்தார்.

‘தமிழர் தந்தை’

‘தமிழர் தந்தை’ என்று சி.பா.ஆதித்தனாருக்கு தந்தை பெரியாரே பெயர் வைத்தார் என்றால் அத்தனை பெருமைகளை உடையவர் அவர். தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் அவருக்கு அறக்கட்டளை இருக்கிறது என்று சொன்னால் அவருக்கு கிடைத்த பெருமை. நமக்கு கிடைத்த பெருமை. இதை எல்லாம் அடுத்த தலை முறைக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் இலக்கியத்துறை பேராசிரியர் இளையாப்பிள்ளை நன்றி கூறினார். நிகழ்ச்சியை முதலாம் ஆண்டு மாணவி அபிராமி நன்றி கூறினார்.


Next Story