பலத்த மழையினால் ஆதனூரில் 10 எக்டேர் உளுந்து பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் நீடாமங்கலத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.
நீடாமங்கலம் நகரில் சில தெருக்களில் கழிவுநீர், மழைநீரும் சேர்ந்து ஓடியதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் எதுவும் ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
உளுந்து - கடலை நாசம்
தொடர் மழையினால் நீடாமங்கலத்தில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இருப்பினும் வடிகால் வசதி இருந்ததால் தற்போது விவசாயிகள் தண்ணீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதனூரில் 10 எக்டேர் உளுந்து பயிரும், தளிக்கோட்டையில் 56 எக்டேர் கடலையும் மழைநீரில் மூழ்கி நாசமானது. ஆதலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வேளாண்மைத்துறையினர் மழையால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் தோறும் நேரில் சென்று பார்வையிட்டு, விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை கூறி வருகின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு
நீடாமங்கலம் தாலுகாவில் மழையால் பாதிப்பு எதுவும் உள்ளதா? என தாசில்தார் கண்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
நீடாமங்கலம் வட்டத்தில் இதுவரை பகுதியாக 25 வீடுகளும், முழுமையாக 9 வீடுகளும் இடிந்துள்ளன. இவை தவிர 3 ஓட்டு வீடுகள் இடிந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
வலங்கைமான்
வலங்கைமான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வலங்கைமானை அடுத்த கோவிந்தகுடி மற்றும் ஆவூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வெற்றிலை கொடிக்கால் சேதம் அடையும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். அதேபோல வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் மழையினால் சேதம் அடைந்து காணப்படுகிறது.
தற்காலிக பாலம்
கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான்-சொக்கணாவூர் இடையே திருமேனி ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் பழுதானது. இதையடுத்து புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆதலால் பொதுமக்கள் எளிதில் ஆற்றை கடந்து செல்லும் வகையில் இந்த பாலத்தின் அருகில் சிமெண்டு குழாய் போட்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
தொடர் கனமழையின் காரணமாக திருமேனி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. ஆதலால் தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து ஆற்றை எளிதில் கடந்து செல்ல சாரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருமேனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பெருகவாழ்ந்தான் பகுதி கிராம மக்கள் மதுக்கூர், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். ஆதலால் புதிய பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிரம்பியது கமலாலய குளம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து பயனற்ற நிலையில் இருந்து வருகிறது. மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக திருவாரூரில் உள்ள கமலாலயம் குளம் நிரம்பியது. மாணவர்கள் நலன் கருதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.