மாவட்ட செய்திகள்

நெல்லை-தென்காசியில் பரவலாக மழை: பாபநாசம் அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு + "||" + Tirunelveli - Tenkasi widely in the rain: 7,000 cubic feet of water from Papanasam Dam

நெல்லை-தென்காசியில் பரவலாக மழை: பாபநாசம் அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

நெல்லை-தென்காசியில் பரவலாக மழை: பாபநாசம் அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
நெல்லை-தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. எனவே, தாமிரபரணி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நெல்லை, 

நெல்லை-தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாபநாசம் அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போதிய மழை பெய்யவில்லை. இதன் காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அந்த அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. எனவே, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் வெள்ளம் தணிந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று மதியம் வரை நெல்லை-தென்காசி மாவட்டங்களில் மீண்டும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பாபநாசம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 141.80 அடியாக இருந்தது. (அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 143 அடி).

எனவே, பாதுகாப்பு கருதி மதியம் 2 மணியளவில் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரத்து 340 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மழை காரணமாக சிற்றாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றில் கலந்ததால் அங்கு கூடுதலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் சீவலப்பேரி ஆற்றுப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிற்றாறு, கடனாநதி, ராமநதி ஆகியவற்றின் தண்ணீர், காட்டாற்று வெள்ளம் ஆகியவை கலப்பதால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 36 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் பாளையங்கால்வாயில் 250 கன அடியும், மருதூர் மேலகால்வாயில் 800 கனஅடியும், மருதூர் கீழக்கால்வாயில் 300 கனஅடியும் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த 1350 கன அடி தண்ணீரை தவிர மற்ற 34 ஆயிரத்து 650 கன அடி தண்ணீரும், தாமிரபரணி ஆற்றில் ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி செல்கிறது.

நெல்லை பேட்டை பகுதியில் நேற்று பெய்த கனமழையால் பேட்டை திருத்து பகுதியை சேர்ந்த பழனி (வயது 49) என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அப்போது பழனி, அவரது மகள் பத்மாவதி (18), பழனியின் அக்கா காந்தா (59) ஆகியோர் வீட்டிற்கு வெளியே இருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் செய்யதுஅலி சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். ராதாபுரம் அருகே உள்ள மகாராஜபுரத்தில் உள்ள பொன்னுத்தாய் என்பவரின் வீடு இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.

அம்பை சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதில் அம்பை இல்லத்தார் வடக்கு தெருவை சேர்ந்த அருணாசலம் மகன் கந்தசாமிக்கு சொந்தமான வீடு இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அருகில் இருந்த கந்தசாமியின் உறவினரான லட்சுமணன் என்பவரது வீட்டின் ஓடுகள் சரிந்து விழுந்ததில் லட்சுமணன், அவரது மகன் மாரியப்பன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதேபோல் அம்பை பெரியகுளத்தை சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரது வீட்டின் பின்பகுதி முழுவதும் மழையில் இடிந்து விழுந்தது. அம்பை சுப்பிரமணியாபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த மற்றொரு கருப்பசாமி என்பவரது வீட்டின் முன்பக்க சாய்வுதளம் மழையில் சரிந்து விழுந்தது. இந்த சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை தாசில்தார் கந்தப்பன், வருவாய் ஆய்வாளர் முருகன், கிராம நிர்வாக அலுவலர் சூரப்பா, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த மழையில் மொத்தம் 221 வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்து உள்ளன. இந்த தொடர்மழையால் நெல்லை ராமையன்பட்டி, வேப்பங்குளம், தச்சநல்லூர் கரையிருப்பு பகுதிகளில் சாலையில் வெள்ளம் தேங்கியது. பேட்டையில் பள்ளிக்கூடத்திற்கு செல்கின்ற வழியில் உள்ள ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அந்த சுரங்கபாதையை அடைத்து வைத்தனர். இதனால் பள்ளிக்கூடத்திற்கு செல்கின்ற மாணவ-மாணவிகள் ரெயில்வே கேட் பகுதியில் சுற்றிச்சென்றனர்.

நெல்லை மாநகர பகுதியில் காலையில் மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் பள்ளிக்கூடங்களுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர்.

நேற்று முன்தினம் 94.80 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 96.40 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு தண்ணீர் வரத்து 1,538 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 34 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம்-44, அம்பை-14.60, சேரன்மாதேவி-14, ராதாபுரம்-9, மணிமுத்தாறு-8, பாளையங்கோட்டை-6, நாங்குநேரி-4, நெல்லை-2.