கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்ற வழக்கு: துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொன்ற வழக்கு: துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 3 Dec 2019 11:15 PM GMT (Updated: 3 Dec 2019 8:39 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கிரு‌‌ஷ்ணகிரி கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு கூறப்பட்டது.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே உள்ள ஏ.கே.கே.எட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமரன். இவரது மனைவி பிரேமா (வயது 24). இவருக்கும், சாமல்பட்டி அருகே உள்ள கொட்டப்பள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டனுக்கும் (23) இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

இவர்கள் கள்ளத்தொடர்பால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து பிரேமா குடும்பத்தினர் கண்டித்தும் மணிகண்டன் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்தார். இந்த நிலையில் கடந்த 14.12.2015 அன்று பிரேமாவை சந்திப்பதற்காக மணிகண்டன் அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த பிரேமா, அவரது மாமனாரான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன் (52), அவரது மற்றொரு மகன் தமிழ்குமரன் (28) மற்றும் உறவினர்கள் ரவிச்சந்திரன் என்கிற ரவி (45), கோவிந்தராஜ் (20) ஆகிய 5 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கினார்கள்.

கொலை, உடல் வீச்சு

மேலும் வீட்டில் படுக்கை அறையில் வைத்து மணிகண்டனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து உடலை அங்கிருந்து எத்தலான்குட்டை ஏரியில் வீசி சென்றனர். இந்த நிலையில் 1.1.2016 அன்று ஏரியில் பிணம் மிதந்தது. இந்த கொலை தொடர்பாக கொலையுண்ட மணிகண்டனின் தாய் செல்வி சாமல்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, ரவிச்சந்திரன் என்கிற ரவி, பிரேமா, மாரியப்பன், தமிழ்குமரன், கோவிந்தராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, கூட்டுச்சதி, கொலையை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இரட்டை ஆயுள் தண்டனை

இந்த வழக்கு கிரு‌‌ஷ்ணகிரி கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ரவிச்சந்திரன் என்கிற ரவி, பிரேமா, மாரியப்பன், தமிழ்குமரன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவிந்தராஜூக்கு ஒரு ஆயுள் தண்டனையும், 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.

Next Story