சேலத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்க எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


சேலத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்க எதிர்ப்பு; பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 9:14 PM GMT)

சேலத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

சேலம்,

சேலம் அழகாபுரம் அருகே நாகமலை அடிவாரம் பகுதியில் கோம்பைகாடு உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிப்பதற்கான ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக மாநகராட்சி என்ஜினீயர் சிபிசக்கரவர்த்தி தலைமையில், அலுவலர்கள், ஊழியர்கள் அங்கு சென்றனர். பின்னர் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் இடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் நிலத்தை சமப்படுத்தினர்.

முற்றுகை போராட்டம்

இது குறித்து தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் நுண்ணுயிர் உரம் தயாரிக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரம் மற்றும் அரசு அதிகாரியின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பொதுமக்களுக்கும், மாநகராட்சி ஊழியர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் நிலம் சமப்படுத்தும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் அதிகாரிகள், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து பொதுமக்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறோம். இங்கு எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லை. தற்போது நாங்கள் இயற்கை சூழலில் வசித்து வருகிறோம். இதை கெடுக்கும் வகையில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. இந்த திட்டத்தை இங்கு செயல்படுத்தினால், குடிநீர் மாசுபடும். மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை செயல் படுத்துவதை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சம்பவ இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story