மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்தமழை: அமராவதி அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்தமழை: அமராவதி அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 9:32 PM GMT)

மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் பெய்த பலத்தமழை எதிரொலியால் அமராவதி அணையின் நீர்மட்டம் 5 நாட்களில் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளி,

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கு பாம்பாறு, தேனாறு, சின்னாறு, கல்லாறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது. அதை அடிப்படையாக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்தை மற்றும் நீர் இருப்பை பொறுத்து பாசன நிலங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யபடுகிறது. அமராவதி அணையில் இருந்து திறக்கப்படுகின்ற தண்ணீர் குதிரையாறு, நங்காஞ்சியாறு, பாலாறு, புறந்தலாறு, நல்லதங்காள் ஓடை போன்ற துணை நதிகளுடன் இணைந்து சுமார் 220 கிலோமீட்டர் தூரம் பயணித்து கரூர் மாவட்டம் திருமுக்கூடலூரில் காவிரியுடன் கலக்கிறது. இந்த பயணத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களின் பாசனத்தேவையையும், நூற்றுக்கணக்கான கிராமங்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.

5 அடி உயர்ந்தது

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்தமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள், ஓடைகள் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தூவானம் அருவியில் ஒன்றிணையும் ஆறுகள் மற்றும் துணை ஆறுகள் கூட்டாற்றில் சின்னாற்றுடன் இணைந்து அமராவதி அணையை தஞ்சம் அடைந்து வருகின்றன. இதனால் அணைக்கு கடந்த சில நாட்களாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மழைக்கு முன்பு கடந்த 29-ந்தேதி 63.55 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்றுகாலை நிலவரப்படி 68.51 அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த 5 நாட்களில் அணையின் நீர் இருப்பு 5 அடி அதிகரித்துள்ளது. அது மட்டுமின்றி 5 நாட்களில் அணைப்பகுதியில் 73 மில்லிமீட்டர் மழைப்பொழிவும் பதிவாகி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து வருவதால் அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாக தெரிகிறது. மேலும் வானம் மேக மூட்டமாக காணப்படுவதுடன் கனமழை பெய்வதற்கான சூழலும் நிலவி வருகிறது. இதனால் அணையின் நீர் இருப்பை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நேற்றைய நிலவரப்படி அணையின் மொத்த நீர் இருப்பு 68.51 அடி ஆகும். அணைக்கு வினாடிக்கு 1232 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. 

Next Story