6 மாத இலவச அரிசிக்கான பணம் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு


6 மாத இலவச அரிசிக்கான பணம் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 10:07 PM GMT)

6 மாத இலவச அரிசிக்கான பணம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா ஜெயராம் திருமண மண்டபத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் கந்தசாமி 21 மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில விருதுகளை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் திருமணத்துக்கான நிதியுதவியை 11 தம்பதிகளுக்கு வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு முடநீக்கு கருவிகளும் வழங்கப்பட்டன.

அமைச்சர் கந்தசாமி

அப்போது அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

மாற்றுத்திறனாளிகளை பராமரிப்பது என்பது சிரமமானது. புதுவையில் 26 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் உண்மையானவர்கள் குறித்து ஆய்வு செய்தால் 2 மடங்கு சலுகைகள் செய்யலாம். ஆனால் அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அரசு வேலைவாய்ப்பில் 4 சதவீதம் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்துள்ளோம். அதேபோல் தனியார் நிறுவனங்களிலும் 4 சதவீதம் வழங்க வலியுறுத்தி உள்ளோம்.

அரிசி ஏன்?

புதுவையில் அரசு சார்பு நிறுவனங்கள் இயங்காமல் 10 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்கிக்கொண்டு உள்ளோம். அந்த 10 ஆயிரம் பேருக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. இதற்கு கடந்த கால ஆட்சியாளர்கள்தான் காரணம். அளவுக்கு அதிகமாக ஆட்களை பணியில் அமர்த்தியதால்தான் இந்த மோசமான நிலை ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் இலவச அரிசி வாங்கும் குடும்பத்தில்தானே வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஏன் தனியாக அரிசி தருகிறீர்கள்? என்று கவர்னர் கேட்கிறார்.

வங்கிக்கணக்கில் பணம்

கடந்த 6 மாத காலமாக இலவச அரிசி வழங்கப்படாததால் அதற்கான தொகை ரூ.92 கோடி இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்படும். அதாவது சிவப்பு ரேஷன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்து 600-ம், மஞ்சள் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1,800-ம் அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.

தொழில் தொடங்குவதற்காக மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடன் ரூ.20 கோடி செலுத்தப்படாமல் உள்ளது. அவர்களின் கடனுக்கான வட்டி ரூ.7 கோடி தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் ஜான்குமார் எம்.எல்.ஏ., சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி, துணை இயக்குனர் கலாவதி, கண்காணிப்பாளர் அல்லிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகள் சிலர் கருப்பு சின்னம் அணியும் விதமாக மாற்று திறனாளிகளுக்கு கருப்பு துணிகளை கொடுத்தனர். அதனை போலீசார் பறித்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story