காங்கிரசுக்கு துரோகம் செய்தவர் சீனிவாச பிரசாத் - சித்தராமையா கடும் தாக்கு


காங்கிரசுக்கு துரோகம் செய்தவர் சீனிவாச பிரசாத் - சித்தராமையா கடும் தாக்கு
x
தினத்தந்தி 3 Dec 2019 11:28 PM GMT (Updated: 3 Dec 2019 11:28 PM GMT)

காங்கிரசுக்கு துரோகம் செய்தவர் தான் சீனிவாச பிரசாத் என்று சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.

மைசூரு,

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் மந்திரியும், காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டு பா.ஜனதாவுக்கு தாவி தற்போது எம்.பி.யாகி இருப்பவருமான சீனிவாச பிரசாத், என்னைப் பற்றி அவதூறு பரப்பி வருகிறார். நான்(சித்தராமையா) தான் காங்கிரசை அழித்து வருகிறேன் என்று கிண்டலாக விமர்சித்து வருகிறார். சீனிவாச பிரசாத் என்னுடைய தலைமையிலான மந்திரிசபையில் தான் பதவி சுகத்தை அனுபவித்தார். மந்திரி பதவியை விட்டுக் கொடுக்கும்படி கேட்டதும் ஆவேசமடைந்து காங்கிரசை விட்டு விலகி, காங்கிரசாருக்கு துரோகம் செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். நஞ்சன்கூடு தொகுதியில் பா.ஜனதா சார்பில் சீனிவாச பிரசாத் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை தோற்கடித்தது யார் என்று அவருக்கு மறந்துவிட்டதா?.

அடுத்தவர்களை கிண்டல் செய்யும் முன்பு தன்னைப் பற்றியும், தனது நிலையைப் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எனது ஆட்சி காலத்தில் மந்திரி பதவியில் இருந்து நான் ஏன் அவரை தூக்கினேன் என்பதை மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர். அதைப்பற்றி நான் வெளிப்படையாக சொல்ல தேவையில்லை. மேலும் அவரைப் பற்றி பேசவும் எனக்கு விருப்பம் இல்லை.

வருகிற 9-ந் தேதி மல்லிகார்ஜுன கார்கே எனக்கு இனிப்பு வழங்குவார் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கூறியிருக்கிறார். அது மீண்டும் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி பற்றிய அறிவிப்பா? என்று கேட்கிறீர்கள். மீண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்காது. அந்த மாதிரியான நிலை உருவாகாது. அதற்கு வாய்ப்பும் இல்லை. இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றிபெறும். ஒருவேளை காங்கிரஸ் வெற்றிபெற்றால் அந்த மகிழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே தனக்கு இனிப்பு வழங்குவார் என்று குமாரசாமி சொல்லி இருக்கலாம்.

குமாரசாமியுடன், மல்லிகார்ஜுன கார்கே என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் நிருபர்கள் தங்களுக்கு என்ன புரிகிறதோ அதை வைத்து செய்தி எழுதுகிறார்கள். மந்திரி பதவிக்காக ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story