தூத்துக்குடியில் மைத்துனரை வெட்டிக் கொலை செய்த லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை


தூத்துக்குடியில் மைத்துனரை வெட்டிக் கொலை செய்த  லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 5 Dec 2019 4:15 AM IST (Updated: 4 Dec 2019 6:56 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில், மைத்துனரை வெட்டிக் கொலை செய்த லாரி டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 6–வது தெருவை சேர்ந்தவர் குமாரவேல். இவருடைய மகன் முருகன்(வயது 48). இவர் சுண்ணாம்பு சுப்பி தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருடைய தங்கை பூபதிக்கும், ஓட்டப்பிடாரம் தாலுகா வேலாயுதபுரத்தை சேர்ந்த முத்துசாமி மகன் சண்முகராஜ்(33) என்பவருக்கும் திருமணம் நடந்தது. சண்முகராஜ் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கணவன்–மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பூபதி தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அடிக்கடி சண்முகராஜ், மைத்துனர் முருகன் வீட்டுக்கு வந்து, தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு கேட்டு தகராறு செய்தார். இது தொடர்பாக முருகனுக்கும், சண்முகராஜூக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

கடந்த 20-3- 2015 அன்று முருகன் உடல் நிலை சரியில்லாததால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். அப்போது மனைவி பூபதியை அழைத்து செல்வதற்காக சண்முகராஜ் அங்கு வந்தார். அப்போது முருகனுக்கும், சண்முகராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சண்முகராஜ், வீட்டுக்குள் நுழைந்து தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம் குற்றம் சாட்டப்பட்ட சண்முகராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யு.எஸ்.சேகர் ஆஜர் ஆனார்

Next Story