பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை


பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 4 Dec 2019 10:00 PM GMT (Updated: 4 Dec 2019 3:16 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கடலூர் முதுநகர்,

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க ரெயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு, சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் சுற்றித்திரிகிறார்களா? என கண்காணித்தும் வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி கோட்ட ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான ரெயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நேற்று காலை கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

பின்னர் ரெயில் நிலைய நடைமேடை மற்றும் தண்டவாள பகுதிகளிலும் சோதனை நடத்தினர். இதற்கிடையே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், மதியம் 12 மணி அளவில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது போலீசார் ரெயிலில் இருந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். இதனால் கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. இதேபோல் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார், ஊர்க்காவல் படையினருடன் சேர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 44 மீனவ கிராமங்களிலும் கடற்கரையோரமாக ரோந்து பணி மேற்கொண்டு, சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர்.

மேலும் கடல் வழியாக சந்தேகப்படும்படியாக யாரேனும் ஊருக்குள் நுழைய முயன்றாலோ? அறிமுகம் இல்லாத நபர்கள் யாரேனும் சுற்றித்திரிந்தாலோ? உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த சோதனை நாளை இரவு வரை நடைபெறும் என போலீசார் ஒருவர் தெரிவித்தார்.

Next Story