மாவட்ட செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா 4-வது நாள்: தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா + "||" + 4th day of Karthaka Deepavati Festival In the gold naga vehicle Chandrasekhar Road

கார்த்திகை தீபத்திருவிழா 4-வது நாள்: தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா

கார்த்திகை தீபத்திருவிழா 4-வது நாள்: தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரர் வீதி உலா
கார்த்திகை தீபத்திருவிழாவின் 4-வது நாளான நேற்று காலை நாக வாகனத்தில் சந்திரசேகரரும், வெள்ளி மூ‌ஷிக வாகனத்தில் விநாயகரும் வீதி உலா வந்தனர்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது.

கார்த்திகை தீபத்திருவிழாவின் 3-வது நாளான நேற்று முன்தினம் காலை விநாயகர் மூ‌ஷிக வாகனத்திலும், அம்பாளுடன் சந்திரசேகரர் பூத வாகனத்திலும், இரவில் வெள்ளி மூ‌ஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியர், சிம்ம வாகனத்தில் அருணாசலேஸ்வரர் உண்ணாமலை அம்மன், அன்னவாகனத்தில் பராசக்தி அம்மன், வெள்ளி ரி‌‌ஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் 4-வது நாளான நேற்று காலை 10.30 மணி அளவில் விநாயகர் வெள்ளி மூ‌ஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் தங்க நாக வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அதன் பின்னே தங்க நாக வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

சாமி ஊர்வலத்தின் போது சாமி வாகனத்தில் குடை அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். நேற்று தங்க நாக வாகனத்தில் சுற்றும் குடை அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர் உண்ணாமலை, பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி கற்பக விருட்சக வாகனம், வெள்ளி காமதேனு வாகனம் மற்றும் இதர வெள்ளி வாகனங்களில் கோவில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குழந்தை வரம் வேண்டியவர்கள், குழந்தை நலனுக்காக வேண்டியவர்கள் தங்களது நேர்த்தி கடனை தீர்ப்பதற்காக கரும்பு தொட்டில் அமைத்து அதில் தங்களது குழந்தையை படுக்க வைத்து மாடவீதியை சுற்றி வந்தனர்.