மாவட்ட செய்திகள்

செஞ்சி அருகே, அரசு பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலி + "||" + Near Senji, Hotel bus collides with government bus

செஞ்சி அருகே, அரசு பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலி

செஞ்சி அருகே, அரசு பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலி
செஞ்சி அருகே அரசு பஸ் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள பென்னகர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்ணன் மகன் மணிகண்டன் (வயது 27). இவர் புதுச்சேரியில் தங்கி, அங்குள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த மணிகண்டன் நேற்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரிக்கு புறப்பட்டார். செஞ்சியை அடுத்த ராஜாம்புலியூர் தொட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி எதிரே வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதோடு, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மணிகண்டன் பலத்த காயமடைந்தார். பஸ்சில் இருந்த அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர்.

அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசார் பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டதோடு, விபத்தில் சிக்கிய மணிகண்டனை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான மணிகண்டனுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவிக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வளைகாப்பு நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் மணிகண்டன் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.