மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டில் மனு


மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கு எதிரான வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 4 Dec 2019 10:30 PM GMT (Updated: 4 Dec 2019 5:06 PM GMT)

தமிழகத்தில் மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

மதுரையைச் சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகதேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த நடைமுறையானது, பெரியளவில் குதிரை பேரம் நடைபெற வழிவகுக்கும். எனவே இந்த அவசர சட்டம் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

கடந்த வாரம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரித்தனர்.

அப்போது வக்கீல் நீலமேகம் ஆஜராகி, ’மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் அவசர சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே எங்கள் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்‘ என்று முறையிட்டார்.

அப்போது தங்களது கோரிக்கை தொடர்பாக வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, வக்கீல் நீலமேகம், ’தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் கோரிக்கையும், எங்களது வழக்கின் கோரிக்கையும் வேறுபடுகிறது. நாங்கள் மறைமுக தேர்தல் அறிவிப்பை மட்டும் எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம்‘ என்றார்.

இதையடுத்து, இதே போல வேறு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் உள்ளதா என தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆய்வு செய்து உறுதிப்படுத்தும்படி நீதிபதிகள் தெரிவித்தனர்.

Next Story