கும்மிடிப்பூண்டி அருகே, டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு கொள்ளை முயற்சி


கும்மிடிப்பூண்டி அருகே, டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 4 Dec 2019 10:30 PM GMT (Updated: 4 Dec 2019 5:11 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு கொள்ளை முயற்சி நடந்தது.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே சத்யவேடு சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் முன்புறம் கண்காணிப்பு கேமராவுடன் கூடிய அலாரம் சென்சார் வசதியுடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு கடப்பாரை மற்றும் பயங்கர ஆயுதங்களோடு மர்மநபர்களின் நடமாட்டம் டாஸ்மாக் கடையில் இருப்பதாக சென்சார் கருவி மூலம் கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் கடை மேலாளர் விஜயகுமாருக்கும் செல்போனில் தகவல் சென்றது.

இதனையடுத்து கடை மேலாளர் விஜயகுமார், தனது செல்போன் மூலம் கடையில் முகமூடி நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருப்பதை அறிந்தார். முகத்தை துணியால் மூடியிருந்த அவர்கள் அனைவரும் அரைக்கால் சட்டை மட்டுமே அணிந்திருந்தனர். அவர்களில் 2 பேர் மேல் சட்டை இல்லாமலும், ஒருவர் மட்டும் பனியனுடன் காணப்பட்டார்.

சென்சார் கருவி மூலம் தகவல் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் பாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் கவரைப்பேட்டை போலீசார், கடை மேலாளர் விஜயகுமார் ஆகியோர் விரைந்து சென்றனர்.

அப்போது மர்மநபர்கள் டாஸ்மாக் கடையின் பின்புற சுவரில் துளையிட்டு கொண்டிருந்தனர். நள்ளிரவு நேரத்தில் போலீசார் தங்களை நெருங்கி வருவதை அறிந்த முகமூடி நபர்கள் தங்களது திருட்டு முயற்சியை பாதியில் கைவிட்டு விட்டு அங்கிருந்து வயல்வெளி வழியாக தப்பி ஓடி விட்டனர். கடையின் பின்பக்க சுவரை முழுமையாக துளையிட்ட முகமூடி கொள்ளையர்களால் கடைக்கு உள்ளே செல்ல முடியாததால் அங்கு லாக்கரில் இருந்த ரூ.1½ லட்சம் தப்பியது.

இரவோடு இரவாக கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் தீவிர ரோந்து பணியை மேற்கொண்டனர். இருப்பினும் மர்மநபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. டாஸ்மாக் கடை ஊழியர்கள் உடனடியாக சிமெண்டு வைத்து கடையின் சுவரில் உள்ள துளையை அடைத்தனர்.

இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story