மயிலாடுதுறையில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. தகவல்


மயிலாடுதுறையில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2019 4:30 AM IST (Updated: 4 Dec 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே கடலங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ராதாகிரு‌‌ஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.விடம், பொதுமக்கள் வீட்டுமனை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின்வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாகவும், மயிலாடு துறையில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரியும் மனுக்கள் அளித்தனர்.

அப்போது மனுக்களை வாங்கி கொண்ட எம்.எல்.ஏ. பேசும்போது கூறியதாவது:-

உரிய நடவடிக்கை

இந்த நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1991-ம் ஆண்டு நாகை மாவட்டம் பிரிக்கப்படும்போது நாடாளுமன்ற தொகுதி அடிப்படையில் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்பின்னர் 1996-ம் ஆண்டு நாகைக்கு அருகில் உள்ள திருவாரூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் தி.மு.க. ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது.

இதன்காரணமாக தான் மயிலாடுதுறை மாவட்டம் அமைய வாய்ப்பு இல்லாமல்போனது. நாகை மாவட்டம் நிலப்பரப்பு ரீதியாக 2 பகுதிகளாக பிரிந்து கிடக்கின்றன. ஒரு பகுதியான மயிலாடுதுறை கோட்ட பகுதி பொதுமக்கள், மாவட்ட தலைநகரான நாகைக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை கடந்து தான் செல்லமுடியும். மயிலாடுதுறை கோட்ட பகுதி மக்கள் மாவட்ட தலைநகர் சென்று வர சிரமப்படுவதை நான் முழுமையாக அறிந்தவன்.

அரசு மருத்துவ கல்லூரி

அந்த அடிப்படையில் மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் மற்றும் மயிலாடுதுறையில் அரசு மருத்துவ கல்லூரியும் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் நமது கோரிக்கையை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார். நிச்சயமாக மயிலாடுதுறை பகுதி பொதுமக்களின் கோரிக்கையை முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து திருச்சிற்றம்பலம், பூதங்குடி, முடிகண்டநல்லூர், கேசிங்கன், கிழாய் ஆகிய ஊராட்சிகளில் எம்.எல்.ஏ., பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். அப்போது அவருடன் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள் இருந்தனர்.



Next Story