செம்மரம் வெட்ட சென்றவர்களுக்கு கூலி தராத தகராறில் பெண் அடித்துக்கொலை - போலீஸ் நிலையம் முற்றுகை, சாலை மறியலால் பரபரப்பு


செம்மரம் வெட்ட சென்றவர்களுக்கு கூலி தராத தகராறில் பெண் அடித்துக்கொலை - போலீஸ் நிலையம் முற்றுகை, சாலை மறியலால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Dec 2019 11:45 PM GMT (Updated: 4 Dec 2019 7:07 PM GMT)

செம்மரம் வெட்ட சென்றவர்களுக்கு கூலி தராததால் ஏற்பட்ட தகராறில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதனால் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடி, 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஆலங்காயத்தை அடுத்த பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 55). இவர், ஆலங்காயம் போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

நானும் எனது மனைவி மல்லிகா (48), மகன் சீனிவாசன் (28), மருமகள் சாந்தபிரியா (25), பேத்தி கோமதி ஆகியோர் ஒரே குடும்பமாக பூங்குளம் கிராமத்தில் வசித்து வருகிறோம்.

பூங்குளம் பகுதியை சேர்ந்த பெரியண்ணன், கிருஷ்ணமூர்த்தி, கரியன் மகன் பழனி மற்றும் பூபதி மகன் பழனி, கட்டையன் மகன்கள் இளையராஜா, இளையகுமார், கோதண்டன் மகன் அசோகன் ஆகியோருக்கும் எனது மகனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் எங்கள் வீட்டிற்கு வந்த அவர்கள் திடீரென என்னையும் எனது மனைவி மற்றும் மகன், மருமகளை தாக்கினர். மேலும் எனது மருமகள் சாந்தபிரியா கழுத்து நெரிக்கப்பட்டு, சுவரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

அதைத் தொடர்ந்து எனது மகன் சீனிவாசனை கடத்திச் சென்றுவிட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இறந்துபோன பெண்ணின் தந்தை மணி என்பவர் ஆலங்காயம் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார்.

இளம் பெண் இறந்ததை அறிந்த அப்பகுதி மக்களும், அவரது உறவினர்களும் ஆலங்காயம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். பின்னர் ஆலங்காயம்-திருப்பத்தூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், ஆலங்காயம் போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறியதால், புகாரில் குறிப்பிட்டுள்ள நபர்களில் 4 பேரை போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆந்திர மாநிலத்திற்கு செம்மரம் வெட்ட சென்றதற்கான கூலித்தராமல் இழுத்தடித்து வந்ததால் தகராறு ஏற்பட்டதாகவும், ஆந்திராவில் இருந்து வெட்டி கொண்டுவரப்பட்ட 900 கிலோ செம்மரக்கட்டைகள் ஒடுகத்தூர் அருகே மறைத்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி (வயது39), கரியன் மகன் பழனி (31), இளையராஜா (31) ஆகிய 3 பேரை கைதுசெய்தனர். மற்ற 4 பேரை தேடிவருகின்றனர்.

Next Story