மாவட்ட செய்திகள்

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பரிசல் இயக்க மீண்டும் தடை + "||" + Heavy rains in Cauvery catchment areas Increase of water supply to Oakenakal

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பரிசல் இயக்க மீண்டும் தடை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பரிசல் இயக்க மீண்டும் தடை
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பரிசல் இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இந்தநிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. மாலை 4 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடியானது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக பரிசல்கள் காவிரி கரையோரம் கவிழ்த்து வைக்கப்பட்டுள்ளன. இதேபோல அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் கரையோரம், அருவி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிக்க வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தினர்.