வேட்பு மனுவில் குற்றவழக்குகளை மறைத்ததாக வழக்கு: தேவேந்திர பட்னாவிஸ் கோர்ட்டில் ஆஜராக விலக்கு - ஜனவரி 4-ந் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு


வேட்பு மனுவில் குற்றவழக்குகளை மறைத்ததாக வழக்கு:  தேவேந்திர பட்னாவிஸ் கோர்ட்டில் ஆஜராக விலக்கு - ஜனவரி 4-ந் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 4 Dec 2019 11:15 PM GMT (Updated: 4 Dec 2019 7:20 PM GMT)

தேர்தல் வேட்பு மனு பிரமாண பத்திரத்தில் குற்றவழக்குகளை மறைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணை நேற்று நடந்தபோது தேவேந்திர பட்னாவிஸ் ஆஜராக கோர்ட்டு விலக்கு அளித்தது. மேலும் ஜனவரி 4-ந் தேதிக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

மும்பை, 

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தன் மீது 1996 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட இரண்டு மோசடி வழக்குகளை மறைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி நாக்பூரை சேர்ந்த வக்கீல் சதிஷ் உகே என்பவர் நாக்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டும், அடுத்து மும்பை ஐகோர்ட்டும் நிராகரித்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் பட்னாவிசுக்கு எதிராக தற்போது நாக்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு விசாரிக்க தொடங்கி உள்ளது.

மேலும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக கோரி பட்னாவிசுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்ற தினத்தன்று போலீசார் தேவேந்திர பட்னாவிஸ் வீடு தேடி சென்று அந்த சம்மனை கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் ஆஜராகவில்லை. அவருக்கு பதில் வக்கீல் உதய் தாப்ளே ஆஜரானார். தவிர்க்க முடியாத காரணத்தினால் அவரால் கோர்ட்டுக்கு வர இயலவில்லை என தெரிவித்த வக்கீல், இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து பட்னாவிசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரினார்.

மேலும் வருகிற 16-ந் தேதி சட்டசபை கூட்டம் தொடங்க இருப்பதால், எதிர்க்கட்சி தலைவராக பதவி வகிக்கும் தேவேந்திர பட்னாவிஸ் பணி அழுத்தத்தில் உள்ளார். எனவே சட்டசபைபை கூட்டம் முடியும் வரை விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் வக்கீல் உதய் தாப்ளே கேட்டுக்கொண்டார்.

ஆனால் இதை எதிர்த்த வக்கீல் சதிஷ் உகே, பட்னாவிசுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாஜிஸ்திரேட்டு நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து பட்னாவிசுக்கு விலக்கு அளித்ததோடு, அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி (அடுத்தமாதம்) 4-ந் தேதி தள்ளி வைத்தார்.

சட்டசபை கூட்டம் வருகிற 21-ந் தேதி முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

Next Story