குறிச்சி கிராமத்தில் தொடர் அட்டகாசம் செய்து வந்த, ஒற்றை காட்டுயானை பிடிபட்டது - ‘கும்கி’கள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்


குறிச்சி கிராமத்தில் தொடர் அட்டகாசம் செய்து வந்த, ஒற்றை காட்டுயானை பிடிபட்டது - ‘கும்கி’கள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்
x
தினத்தந்தி 4 Dec 2019 10:45 PM GMT (Updated: 4 Dec 2019 7:20 PM GMT)

குறிச்சி கிராமத்தில் தொடர் அட்டகாசம் செய்து வந்த ஒற்றை காட்டுயானையை வனத்துறையினர் கும்கிகளின் உதவியுடன் நேற்று பிடித்தனர்.

குடகு,

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா குட்டா அருகே அமைந்துள்ளது குறிச்சி கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ஒற்றை காட்டுயானை, இந்த கிராமத்திற்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது.

இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் அந்த காட்டு யானையை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே அந்த காட்டுயானை, காபித்தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து, தொழிலாளி ஒருவரையும் தாக்கி கொன்றது.

இதையடுத்து அந்த காட்டுயானையை பிடிக்க வனத்துறையினர் அரசிடம் அனுமதி கோரினர். அதன்பேரில் மாநில அரசு, அந்த காட்டுயானையை பிடிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. அதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கிறிஸ்துராஜ், தயானந்த் ஆகியோர் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினரும், தன்னார்வலர்களும் நேற்று காலையில் தசரா விழாவில் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து செல்லும் அர்ஜூனா யானை மற்றும் கோபாலசாமி, கிருஷ்ணா, கணேஷ், பலராமா, அபிமன்யு ஆகிய கும்கி யானைகளை மத்திக்கோடே யானைகள் முகாமில் இருந்து வரவழைத்தனர்.

யானைகள் வந்தவுடன் அவற்றுடன் வனத்துறையினர், அந்த ஒற்றை காட்டுயானையை தேடி குறிச்சி கிராமத்தையொட்டி அமைந்துள்ள காபித்தோட்டங்களுக்குள் புகுந்தனர்.

அப்போது அங்கு ஒரு காபித்தோட்டத்தில் அந்த காட்டுயானை அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த வனத்துறையினர் கால்நடை டாக்டரின் உதவியுடன் மயக்க ஊசியை துப்பாக்கி மூலம் காட்டுயானை நோக்கி செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தப்பட்டதும் அந்த காட்டுயானை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடியது. அதை துரத்தியபடி கும்கி யானைகளுடன் வனத்துறையினர் சென்றனர். பின்னர் அந்த காட்டுயானை, கும்கி யானைகளுடன் மல்லுக்கட்டியது. அப்போது அந்த யானையை அர்ஜூனா தலைமையிலான கும்கி யானைகள் ஆசுவாசப்படுத்தின.

பின்னர் அந்த காட்டுயானையை கயிறு கட்டி கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் இழுத்து வந்து லாரியில் ஏற்றினர். அதையடுத்து அந்த காட்டுயானை துபாரே யானைகள் முகாமில் விடப்பட்டது.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பிடிபட்டது 24 வயதான ஆண் யானை ஆகும். தற்போது அது துபாரே யானைகள் முகாமில் விடப்பட்டுள்ளது. அங்கு அந்த யானைக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. ஏற்கனவே துபாரே யானைகள் முகாமில் 32 யானைகள் உள்ளன. இந்த யானையுடன் சேர்த்து துபாரே யானைகள் முகாமில் இனி 33 யானைகள் பராமரிக்கப்படும்“ என்று கூறினார்.


Next Story