மாவட்டம் முழுவதும், அரிசி ரே‌‌ஷன் கார்டாக மாற்றுவதற்கு 10 ஆயிரத்து 913 பேர் விண்ணப்பம்


மாவட்டம் முழுவதும், அரிசி ரே‌‌ஷன் கார்டாக மாற்றுவதற்கு 10 ஆயிரத்து 913 பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 4 Dec 2019 10:15 PM GMT (Updated: 4 Dec 2019 7:21 PM GMT)

மாவட்டம் முழுவதும் சர்க்கரை ரே‌‌ஷன் கார்டை, அரிசி ரே‌‌ஷன் கார்டாக மாற்றுவதற்கு 10 ஆயிரத்து 913 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தில் ரே‌‌ஷன்கடைகளில் விலையில்லா அரிசி, கோதுமை மற்றும் மானிய விலையில் சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் அரிசி ரே‌‌ஷன்கார்டு, சர்க்கரை ரே‌‌ஷன்கார்டு, நன் கார்டு என 3 வகையான ரே‌‌ஷன்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ‘நன்’ கார்டுகளுக்கு எந்த பொருளும் கிடையாது.

மேலும் அரிசி ரே‌‌ஷன்கார்டுகளை பொறுத்தவரை அனைத்து பொருட்களும் வாங்கலாம். ஆனால், சர்க்கரை ரே‌‌ஷன்கார்டுகளுக்கு அரிசி வாங்க முடியாது. இதனால் சர்க்கரை ரே‌‌ஷன்கார்டு வாங்கியவர்கள், அரிசி வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, சர்க்கரை ரே‌‌ஷன்கார்டு வைத்துள்ளவர்கள், அரிசி ரே‌‌ஷன்கார்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.

இதற்காக கடந்த மாதம் 29-ந்தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதில் இணையதளம், தாலுகா அலுவலகத்தின் மூலமாகவும் மக்கள் விண்ணப்பித்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரத்து 982 ரே‌‌ஷன்கார்டுகள் உள்ளன. அதில் 19 ஆயிரத்து 865 சர்க்கரை ரே‌‌ஷன்கார்டுகள் இருந்தன.

இதற்கிடையே 10 ஆயிரத்து 913 பேர் தங்களுடைய சர்க்கரை ரே‌‌ஷன்கார்டை, அரிசி ரே‌‌ஷன்கார்டாக மாற்றும்படி விண்ணப்பம் செய்து உள்ளனர். இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அவை அரிசி ரே‌‌ஷன்கார்டுகளாக மாற்றப்படவில்லை. இதனால் அரிசி ரே‌‌ஷன்கார்டாக மாற்ற விண்ணப்பித்த 10 ஆயிரத்து 913 பேரும், இந்த மாதம் அரிசி வாங்க முடியாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story