மும்பை வந்த சுவீடன் நாட்டு அரச தம்பதி


மும்பை வந்த சுவீடன் நாட்டு அரச தம்பதி
x
தினத்தந்தி 4 Dec 2019 10:45 PM GMT (Updated: 4 Dec 2019 7:32 PM GMT)

5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள சுவீடன் நாட்டு அரச தம்பதி நேற்று மும்பைக்கு வந்தனர். அவர்கள் வெர்சோவா கடற்கரையை சுத்தம் செய்தனர்.

மும்பை, 

சுவீடன்நாட்டுமன்னர் 16-ம் கார்ல் கஸ்தாப், ராணி சில்வியா ஆகியோர் அரசுமுறை பயணமாககடந்த 2-ந் தேதிஇந்தியா வந்தனர்.அன்று டெல்லி வந்தடைந்தஅவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சுவீடன் அரச தம்பதியர் சந்தித்து பேசினர். அப்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்புகளை தொடர்ந்து மன்னர் கார்ல் கஸ்தாப் மற்றும் ராணி சில்வியா இருவரும் டெல்லி செங்கோட்டை, புகழ்பெற்ற ஜமா மசூதி உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்தனர். இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர்கள் நேற்று காலை மும்பை வந்தனர். வெர்சோவா கடற்கரை சென்ற அரச தம்பதியர், அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டனர். கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றினர்.

பின்னர் ராஜ்பவன் வருகை தந்த மன்னர் கஸ்தாப், ராணி சில்வியாவை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மனைவி ராஷ்மி தாக்கரேயும் கலந்து கொண்டனர். இதையடுத்து சுவீடன் நாட்டு அரச தம்பதியருக்கு கவர்னர் மதிய விருந்து அளித்தார்.

பிற்பகலில் அந்த தம்பதியினர் மத்திய மும்பையில் உள்ள ஏழை குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடினர்.

மும்பை நிகழ்ச்சிகளை முடித்து கொண்ட சுவீடன் நாட்டு அரச தம்பதியினர் இன்று(வியாழக்கிழமை) உத்தரகாண்ட் மாநிலம் செல்ல உள்ளனர்.

Next Story