தஞ்சையில் சின்னவெங்காயம் - பல்லாரி விலை கடும் உயர்வு கிலோ ரூ.160-க்கு விற்பனை


தஞ்சையில் சின்னவெங்காயம் - பல்லாரி விலை கடும் உயர்வு கிலோ ரூ.160-க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Dec 2019 10:45 PM GMT (Updated: 4 Dec 2019 7:40 PM GMT)

தஞ்சையில் சின்னவெங்காயம் - பல்லாரி விலை கடுமையாக உயர்ந்து கிலோ ரூ.160-க்கு விற்பனையானது.

தஞ்சாவூர்,

தங்கம் விலை உயர்வை போல் நாளுக்கு நாள் வெங்காயத்தின் விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் வெங்காய உற்பத்தி போதுமானதாக இல்லை. ஆதலால் கர்நாடகா, மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்படுகிறது.

தட்டுப்பாடு

அந்த மாநிலங்களில் மழையின் காரணமாக வெங்காயத்தின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. போதிய விளைச்சல் இல்லாத காரணத்தினால் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு கொடைக்கானல், திண்டுக்கல், பொள்ளாச்சி, தேனி, நிலக்கோட்டை, திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து தக்காளி, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

மராட்டியம், கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். வழக்கமாக காமராஜர் மார்க்கெட்டிற்கு ஒரு நாளைக்கு 20 டன் வெங்காயம் லாரிகளில் கொண்டு வரப்படும். ஆனால் தற்போது 3 டன் அளவிற்கு தான் வெங்காயம் வருகிறது. இதனால் கடந்த 1 மாதமாகவே வெங்காயத்தின் விலை ஏறிக் கொண்டே செல்கிறது. கடந்த வாரம் சின்னவெங்காயம் கிலோ ரூ.150-க்கும், பல்லாரி என்று அழைக்கப்படும் பெரிய வெங்காயம் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பல்லாரி விலை உயர்வு

தொடர்ந்து வரத்து குறைவாக இருந்ததால் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. சின்னவெங்காயம் மற்றும் பல்லாரி விலையும் உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.50 வரை பல்லாரி விலை உயர்ந்துள்ளது. தஞ்சையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.160-க்கும், பல்லாரி கிலோ ரூ.160-க்கும் நேற்று விற்பனையானது.

விலைஉயர்ந்து கொண்டே செல்வதால் மக்களும் அதிகமாக வெங்காயத்தை வாங்காமல் ¼ கிலோ அளவிற்கு மட்டுமே வாங்கி செல்கின்றனர். ஓட்டல்களில் ஆம்லெட் போடுவதற்கு வெங்காயத்திற்கு பதிலாக முட்டைகோஸை பயன்படுத்தி வருகின்றனர்.

Next Story