மாவட்ட செய்திகள்

தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் + "||" + In TamilNadu, Opposition parties get together Meet the local elections

தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்

தமிழகத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்த உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
பெருமாநல்லூர்,

திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் மரணம் அடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் வி.பி.சாமிநாதன் உருவப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து நடந்த இரங்கல் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

உச்சநீதிமன்றம் டிசம்பர் 13-ந் தேதிக்குள் உள்ளாட்சி சட்ட நடைமுறைகளை உள்ளடக்கி தேர்தல் தேதியை அறிவிக்க உத்தரவிட்டதால்தான் தேர்தலை நடத்துவதாக அறிவித்துள்ளனர். அதிலும் கிராம ஊராட்சிகளுக்குத்தான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்குத் தேர்தல் பிறகு அறிவிப்பதாக சொல்லி இருக்கின்றனர். இதன் மூலம் ஆளும் கட்சியினர் மோசடி செய்வதற்காகவே தேர்தலைப்பிரித்து நடத்துகிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி தேர்தல் நடந்தால் மோசடி செய்து, தோற்றவர்களை வெற்றி பெற்றவர்களாக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எப்படி இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்தே தேர்தலைச் சந்திப்போம். இப்போது பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி ரூ.2 ஆயிரம் கோடியை அள்ளி வீசுகிறார்கள். மக்களுக்குப்பணம் கொடுப்பதை வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அரசியல் உள்நோக்கத்துடன் கொடுப்பதைத்தான் நாங்கள் விமர்சிக்கிறோம்.

பா.ஜனதா கட்சியின் 5 ஆண்டு கால ஆட்சி முடியும்போது இந்த நாடு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது.

கிராமப்புற பட்டினிச்சாவைத் தடுக்கும் கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டத்துக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. அதையும் முறையாக கொடுப்பதில்லை. ஆனால் இந்த நாட்டின் கார்ப்ரேட்டுகளுக்கு பட்ஜெட்டில் ரூ.2.80 லட்சம் கோடி சலுகை அளிக்கப்பட்டது, அதன்பிறகும் அவர்களுக்கு ரூ.1.95 லட்சம் கோடி சலுகை வழங்கினர். இப்போது ரூ.1.45 லட்சம் கோடி வரிச்சலுகை அறிவித்துள்ளனர். கார்ப்ரேட்டுகளுக்கு தவணை, தவணையாக சலுகை வழங்கும் பாரதீய ஜனதா அரசு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யவோ, சலுகை வழங்கவோ மறுத்து வருகிறது.

கிராமப்புற 100 நாள் தொழிலாளர்களுக்கு 4 மாதம், 5 மாதம் என சம்பள பாக்கி வைத்திருக்கிறது. அதேபோல் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஒழித்துக்கட்ட முடிவு செய்துள்ளனர்.

ரூ.7 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள். இது இந்திய மக்களின் சொத்து. சேலம் உருக்காலை, திருச்சி பாய்லர் ஆலை போன்ற பொதுத்துறை நிறுவனங்களை ஏலம் விடுகிறார்கள். ராணுவ தளவாடத் தொழிற்சாலைகளான திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை ஆகியவற்றை ஏலம் போடுகிறார்கள்.

நெருக்கடி அதிகரிக்கும்போது, மக்கள் நலத்திட்டங்களை குறைக்கிறார்கள். நாட்டில் 600-க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. அவற்றையும் தாரை வார்க்கிறார்கள். 70 ஆண்டுகள் பாடுபட்டு உருவாக்கிய கட்டமைப்பைச் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையையே மாற்றி புதிய சாசனத்தை உருவாக்க துவேஷத்துடன் செயல்படுகிறார்கள். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு எனச் சொல்லி ஒற்றை கலாசார திணிப்பை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில்தான் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்தியா மிகப்பெரும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இதை எதிர்த்துக் களம் காண கூடியவர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இடதுசாரிகளும் இருக்கிறார்கள். ஜனவரி 8-ந் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

இந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச்செயலாளர் செ.முத்துக்கண்ணன் மற்றும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.