ஈரோட்டில், 7-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - ஆதரவற்ற குழந்தைகள் இல்ல டிரைவர் கைது


ஈரோட்டில், 7-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் - ஆதரவற்ற குழந்தைகள் இல்ல டிரைவர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2019 9:45 PM GMT (Updated: 4 Dec 2019 8:07 PM GMT)

ஈரோட்டில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 7-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, 

ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் இல்லத்தில் ஆதரவற்ற சிறுமிகள் 35 பேர் தங்கி உள்ளனர். அவர்கள் அருகில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். அந்த இல்லத்தில் வாகன டிரைவராக ஈரோடு மூலப்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த பசுபதி (வயது 59) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் அந்த இல்லத்தில் 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமிக்கு டிரைவர் பசுபதி கடந்த சில நாட்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். கடந்த மாதம் 19-ந் தேதி அந்த சிறுமியை பசுபதி தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

பசுபதிக்கு பயந்த அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்தார். சிறுமி வழக்கம்போல் இல்லாமல் சோகமாக இருப்பதை பார்த்த அங்கிருந்த நிர்வாகிகள் சிறுமியை தனியாக அழைத்து பேசினார்கள். அப்போது பசுபதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த விவரத்தை அழுதுகொண்டே சிறுமி கூறினாள். இதைக்கேட்டு நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்பேரில் பசுபதியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Next Story