சுரண்டை அருகே, சாலையை சீரமைக்ககோரி நாற்று நடும் போராட்டம்


சுரண்டை அருகே, சாலையை சீரமைக்ககோரி நாற்று நடும் போராட்டம்
x
தினத்தந்தி 4 Dec 2019 10:30 PM GMT (Updated: 4 Dec 2019 8:07 PM GMT)

சுரண்டை அருகே சேறும் சகதியுமாக காணப்படுகிற தெருக்களில் சாலையை சீரமைக்ககோரி, அப்பகுதி பெண்கள் அங்கு நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சுரண்டை, 

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சாம்பவர் வடகரை நகரப்பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதி 5-வது வார்டு தெற்கு யாதவர் தெரு மற்றும் 12-வது வார்டு ஆசாத் நகர் 1-வது தெரு. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் இந்த பகுதியில் உள்ள மழைநீர், சாக்கடை நீருடன் கலந்து தெருக்கள் சேறும், சகதியாக மாறியது. இதில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்தநிலையில் சாலையை சீரமைத்து அந்த பகுதியில் வாறுகால் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாம்பவர் வடகரை நகரப்பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர்.

ஆனால் இதுவரை இதுதொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் நேற்று அந்த பகுதியில் திரண்டனர். பின்னர் சேறும் சகதியுமாக காணப்படும் அந்த இடத்தில் இறங்கி பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

Next Story