மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது
x
தினத்தந்தி 4 Dec 2019 10:30 PM GMT (Updated: 4 Dec 2019 8:07 PM GMT)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியது. மேலும், நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

நெல்லை, 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து குளம், அணை உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் கடந்த 30-ந் தேதி 142 அடியை தாண்டியது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 468 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அந்த தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அப்போது அணையின் நீர்மட்டம் 141.50 அடியாக இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 145.51 அடியாக உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணையின் உச்சபட்ச உயரம் 118 அடி ஆகும். இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை நாலுமுக்கு பகுதியில் கடந்த 30-ந் தேதி 288 மில்லிமீட்டர் மழையும், மணிமுத்தாறில் 150 மில்லிமீட்டர் மழையும் பெய்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 92 அடியாக இருந்தது.

இதையடுத்து தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் 96.40 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து நேற்று காலை நிலவரப்படி 99 அடியாக இருந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மதியம் 2 மணியளவில் அதன் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

கடனாநதி அணை நீர்மட்டம் 83 அடியாக உள்ளது. இதேபோல் ராமநதி அணை நீர்மட்டம் 82 அடி, கருப்பாநதி அணை 70.21 அடி, குண்டாறு அணை 36.10 அடி, நம்பியாறு அணை 16.56 அடி, கொடுமுடியாறு அணை 40 அடி, அடவிநயினார் அணை 132.22 அடியாக உள்ளன. இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் பாசனத்துக்காக அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகின்றன.

பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரத்து 468 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாலும், கடனாநதி, ராமநதி அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறக்கப்பட்டதாலும் தாமிரபரணி ஆற்றில் நேற்றும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும், பரவலாக பெய்து வரும் மழை நீரும் கலப்பதால் தண்ணீர் ஆற்றில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோவில், தைப்பூச மண்டபம் மற்றும் கல்மண்டபங்களை சூழ்ந்தபடி செல்கிறது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி வரை (24 மணி நேரத்தில்) பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம்-48, சேர்வலாறு-26, கடனாநதி-25, ராமநதி-22, மணிமுத்தாறு-15, அடவிநயினார்-12, கொடுமுடியாறு- 10, அம்பை-4, தென்காசி-5, சங்கரன்கோவில்-2, கருப்பாநதி- 2, குண்டாறு-2, சிவகிரி-1.

Next Story