வங்கியில் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் ரூ.8 லட்சம் மோசடி - பெண் கைது


வங்கியில் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் ரூ.8 லட்சம் மோசடி - பெண் கைது
x
தினத்தந்தி 4 Dec 2019 11:15 PM GMT (Updated: 4 Dec 2019 8:29 PM GMT)

வங்கியில் கடன் வாங்கி தருவதாக ஆவணங்களை பெற்று அதன் மூலம் வீட்டு உபயோக பொருட்களை வாங்கி நூதன முறையில் ரூ.8 லட்சம் வரை மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர், 

சென்னை சாலிகிராமம் கே.கே.கார்டனை சேர்ந்தவர் மீனா (வயது 35). பாரிமுனை 3-வது கடற்கரை சாலையைச் சேர்ந்தவர் சங்கர் (30). இவர்கள் இருவரும் வங்கியில் கடன் வாங்கித் தருவதாக ஆன்-லைன் மூலம் விளம்பரம் செய்தனர்.

இதை நம்பி பாரிமுனை பகுதியைச் சேர்ந்த பவுசியா பேகம், பிரவீன்குமார், சந்துரு ஆகியோர் இவர்களை தொடர்பு கொண்டனர். அப்போது கடன் வாங்க தேவைப்படுவதாக கூறி இவர்களிடம் இருந்து ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில் இவர்களின் செல்போன்களுக்கு, தவணை முறையில் வீட்டு உபயோக பொருட்களை வாங்கியதற்கான முதல் தவணையை கட்டும்படி குறுந்தகவல் வந்தது. தாங்கள் எந்த பொருட்களும் வாங்காதபோது இதுபோல் குறுந்தகவல் வந்ததால் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் இதுபற்றி விசாரித்தனர்.

அப்போதுதான், வங்கியில் கடன் வாங்கி தருவதாக தங்களிடம் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு நகல்கள் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கிய மீனா, சங்கர் ஆகிய இருவரும் அந்த ஆவணங்களை கொடுத்து, தங்களுக்கே தெரியாமல் டி.வி., பிரிட்ஜ், ஏ.சி. உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை இவர்களின் பெயர்களில் தவணை முறையில் வாங்கியதும், பின்னர் அந்த பொருட்களை விற்று, காசாக்கி மோசடி செய்ததும் தெரிந்தது.

இதுபற்றி பாதிக்கப்பட்ட 3 பேரும் தனித்தனியாக வடக்கு கடற்கரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மீனா மற்றும் சங்கரை பிடித்து விசாரித்தனர்.

அதில் இவர்கள் இருவரும், இதுபோல் பலரிடம் வங்கி கடன் வாங்கி தருவதாக ஆவணங்களை பெற்று, அதில் உள்ளவர்களின் பெயரில் வீட்டு உபயோக பொருட்களை தவணை முறையில் வாங்கி விற்று பணமாக்கியதும், இவ்வாறு சுமார் ரூ.8 லட்சம் வரை மோசடி செய்து இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து மீனா மற்றும் சங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கைதான இவர்கள் இருவரும் வேறு எங்காவது இதுபோன்று ஆவணங்களை பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளனரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story