வேப்பம்பாளையம் துணைமின்நிலைய வளாகத்தில் கேங்மேன் காலிப்பணியிடத்திற்கான உடல்தகுதி தேர்வு


வேப்பம்பாளையம் துணைமின்நிலைய வளாகத்தில் கேங்மேன் காலிப்பணியிடத்திற்கான உடல்தகுதி தேர்வு
x
தினத்தந்தி 6 Dec 2019 4:30 AM IST (Updated: 5 Dec 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகேயுள்ள வேப்பம்பாளையம் துணைமின்நிலைய வளாகத்தில் மின்வாரிய கேங்மேன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான உடல் தகுதி தேர்வு நடந்தது. அப்போது விண்ணப்பதாரர்களை மின்கம்பத்தில் ஏறவிட்டு பரிசோதித்தனர்.

கரூர்,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் வேப்பம்பாளையம் 110 கே.வி. கிரிட் துணைமின் நிலைய வளாகத்தில் டிசம்பர் 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை மின்வாரிய கேங்மேன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மழையின் காரணமாக கடந்த 2, 3-ந்தேதிகளில் உடல்தகுதி தேர்வு ரத்து செய்யப்பட்டு, அதற்குரிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து வேப்பம்பாளையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு தொடர்ந்து நடந்து வருகிறது. நேற்று 2-வது நாளாக கரூர் மேற்பார்வை பொறியாளர் வினோதன் மேற்பார்வையில், திருச்சி மின்பொறியாளர்கள் குழுவினர் உடல் தகுதி தேர்வினை நடத்தினார்கள். கரூர் மட்டும் அல்லாது அரியலூர், திண்டுக்கல், கடலூர் உள்ளிட்ட இடங்களை சேர்ந்தவர்களும் இந்த தேர்வில் கலந்து கொண்டனர்.

இதில் பெண்களின் எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே இருந்தது. அவர்களும் மின்கம்பத்தில் ஏறுகின்ற சிரமத்தை உணர்ந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதை காண முடிந்தது. ஆனால் இளைஞர்கள் உள்ளிட்டோர் எப்படியாவது தகுதியினை நிரூபித்துவிட வேண்டும் என்கிற முயற்சியில் சளைக்காமல் தேர்வில் பங்கேற்றனர்.

30 அடி உயர கம்பத்தில் ஏறவிட்டு சோதனை

30 அடி உயர மின்கம்பத்தில் உச்சியில் ஏறி அதில் மின்சார வயர்கள் செல்லக்கூடிய வகையிலான இரும்பினாலான கிராஸ் ஆரத்தை 8 நிமிடங்களுக்குள் பொருத்துவது, உயர்அழுத்த மின்பாதைக்கான கிரிப்பர் செட்டை 2 நிமிடங்களுக்குள் பொருத்துவது, 31½ கிலோ எடை கொண்ட கிராஸ் ஆரத்தை தூக்கி கொண்டு 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடத்திற்குள் கடந்து செல்வது என்கிற 3 வகையில் உடல் தகுதி தேர்வு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்தப்பட்டது. மின்கம்பத்தில் ஏறுகிற போது தவறி விழுந்தால் காயமடையாதபடி கீழே வலை கட்டப்பட்டிருந்தது. அதற்கு கீழே மண்தரையில் பள்ளம் தோண்டப்பட்டு தேங்காய் நார்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

சான்றிதழ் சரிபார்ப்பு, 3 பிரிவு உடல் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், விரைவில் நடைபெறவுள்ள எழுத்து தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும். உடல்தகுதி தேர்வு நடைபெறுகிற இடத்தில் வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தேர்வில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேட்டை தடுக்கும் விதமாக தீவிர சோதனைக்கு பிறகே விண்ணப்பதாரர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

உடல் தகுதியை பரிசோதிக்க...

கேங்மேன் பதவிக்கான உடல்தகுதி தேர்வு பற்றி கரூர் மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கேங்மேன் பணியிடத்திற்கு 5-ம் வகுப்பு வரை மட்டும் படித்திருந்தால் போதுமானது ஆகும். ஆனால் பொதுவெளியில் குடியிருப்புகளில் உள்ள மின்கம்பங்களை சீரமைப்பது உள்ளிட்டவை தான் அவர்களது பிரதான பணி ஆகும். எனவே கேங்மேனுக்கு உடல் தகுதி, மின்பொருட்களை கையாளும் திறன் என்பது முக்கியமானது.

அதற்காக தான் மின்கம்பத்தில் ஏறி கிராஸ் ஆரத்தை பொருத்த செய்வது உள்ளிட்ட சோதனைகள் இந்த தேர்வில் செய்யப்படுகின்றன. வேப்பம்பாளையம் துணை மின்நிலைய தேர்வு மையத்தில் மொத்தம் 1,719 பேருக்கு உடல் தகுதி தேர்வு நடத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தினமும் காலை, மாலை வேளைகளில் தலா 100 பேருக்கு உடல் தகுதி தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அந்த இரண்டு நாட்களுக்கான மாற்றுத் தேதி விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.மேலும் விவரங்களுக்கு tangedco.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என்று கூறினார்.

Next Story