கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி: கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது


கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி: கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 5 Dec 2019 5:07 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பயிற்சி கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான பணிகள் குறித்த பயிற்சி நடந்தது. இந்த பயிற்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள், 1995-ம் ஆண்டு ஊராட்சி (தேர்தல்கள்) விதிகள், மாநில தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும். சட்டப்பூர்வ ஆணைகள் மற்றும் அறிவுரைகள் மற்றும் சுற்றறிக்கைகளை நன்கு தெரிந்து கொண்டு கடைபிடிக்க வேண்டும்.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட வார்டு உறுப்பினர் ஆகிய பணியிடங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் போது, அரசு நிர்ணயித்த கட்டணத்தை பெற்றுக்கொண்டு, உரிய பதிவேட்டில் எழுதி பராமரிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகள் குறித்த சந்தேகங்களை தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுதாரர்களுக்கு நிவர்த்தி செய்ய வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு ஒருவர் வேட்புமனு செய்திருந்தால் உரிய விதியின்படி ஒரு மனுவை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மற்றவை உரிய காரணங்களுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

மேலும், வேட்புமனுவில் பெயர் பிழை, வார்டு எண் அல்லது பாகம் எண் பிழை இருந்தால் உறுதிப்படுத்தி கொண்டு அதனை ஏற்றுக் கொள்ளலாம். அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியினை செவ்வனே செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பயிற்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கமலகண்ணன் மற்றும் உதவி இயக்குனர்கள், துணை ஆட்சியர்கள், அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story