கந்தம்பாளையம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


கந்தம்பாளையம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 5 Dec 2019 11:15 PM GMT (Updated: 5 Dec 2019 5:23 PM GMT)

கந்தம்பாளையம் அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கந்தம்பாளையம், 

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள சித்தம்பூண்டியில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை மற்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவில் திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவிலில் உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலுக்கு வந்தனர்.

பின்னர் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த ½ பவுன் மதிப்பிலான சாமி பொட்டு, மற்றும் ரூ.15 ஆயிரத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதேபோல அதே பகுதியில் உள்ள ஸ்ரீ பொன் காளியம்மன் கோவிலின் கிரில் கேட்டில் இருந்த பூட்டை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். பின்னர் உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் உண்டியலை உடைக்க முடியவில்லை.

இதையடுத்து உண்டியல் உடைப்பு முயற்சியை கைவிட்ட மர்ம நபர்கள் கோவிலில் இருந்த 2 மணிகளை மட்டும் திருடி சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.4 ஆயிரம் ஆகும். நேற்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் திருட்டு குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் 2 கோவில்களுக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கோவில்களில் பணம், பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story