3 ஊராட்சிகளின் போலீஸ் நிலைய எல்லை பிரச்சினையில் குழப்பம் - எங்கு புகார் கொடுப்பது என தெரியாமல் பொதுமக்கள் திண்டாட்டம்
ஆம்பூர் தாலுகாவில் இருந்த 5 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு குடியாத்தம் தாலுகாவில் இணைக்கப்பட்டது. இதனால் கூத்தம்பாக்கம், கொல்லமங்கலம் பள்ளிகுப்பம் ஊராட்சியை சேர்ந்தவர்கள் எந்த போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிப்பது என தெரியாமல் பொது மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
அணைக்கட்டு,
வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மாவட்டங்கள் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் செயல்பட்டு வருகின்றது. ஆம்பூர் தாலுகா திருப்பத்தூர் மாவட்டத்திலும் குடியாத்தம் தாலுகா வேலூர் மாவட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆம்பூர் தாலுகாவில் மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட அகரம்சேரி, சின்னசேரி, கூத்தம்பாக்கம், கொல்லமங்கலம், பள்ளிகுப்பம் ஆகிய 5 ஊராட்சிகள் மாவட்டம் பிரிப்பதற்கு முன்பே குடியாத்தம் தாலுகாவில் இணைக்கப்பட்டு விட்டது.
இவற்றில் அகரம்சேரி, சின்னசேரி ஆகிய 2 ஊராட்சிகள் பள்ளிகொண்டா போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் ஏற்கனவே இருந்து வருகின்றது. கூத்தம்பாக்கம், கொல்லமங்கலம், பள்ளிகுப்பம் ஆகிய 3 ஊராட்சிகள் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலைய கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்த நிலையில் ஆம்பூர் தாலுகா, திருப்பத்தூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டு விட்டதால் கூத்தம்பாக்கம் உள்பட 3 ஊராட்சிகளும் எந்த போலீஸ் நிலைய எல்லை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் அவர்கள் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதா?, குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதா? ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பதா? என்ற திண்டாட்டத்தில் தவிக்கின்றனர்.
எனவே காவல் துறை உயர் அதிகாரிகள் இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story