போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நீடாமங்கலத்தில் கீழ்ப்பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நீடாமங்கலத்தில் கீழ்ப்பாலம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2019 11:00 PM GMT (Updated: 5 Dec 2019 5:47 PM GMT)

நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க கீழ்ப்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறை அலுவலகங்கள் உள்ளன. அதேபோல மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. ஆதலால் நீடாமங்கலத்திற்கு தினமும் எண்ணற்ற பேர் வருகின்றனர். நீடாமங்கலம் நகர் பகுதியில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும், திருச்செந்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் தினமும் ஏராளமான அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் நீடாமங்கலம் வழியாக திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

அரசு - தனியார் பஸ்

இதேபோல் அதிராம்பட்டினம், வேதாரண்யம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் இருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை, புதுச்சேரி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கும் நாள்தோறும் ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் சென்று வருகின்றன.

காரைக்கால், நாகை, திருவாரூர், நீடாமங்கலம் வழியாக தஞ்சை, திருச்சி வரையிலான பயணிகள் ரெயில்களும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக மானாமதுரைக்கு பயணிகள் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு நீடாமங்கலம் வழியாக பயணிகள் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக சென்னைக்கு மன்னை எக்ஸ்பிரஸ் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக கோவைக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலும், காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூர், நீடாமங்கலம் வழியாக எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் தினமும் சென்று வருகின்றன.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

இவை தவிர மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக திருப்பதிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும், மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக ஜோத்பூருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலும், காரைக்கால் வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரெயிலும் நீடாமங்கலம் வழியாக தான் சென்று வருகின்றன.

காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றிய சரக்கு ரெயில் நீடாமங்கலம் வழியாக தூத்துக்குடிக்கும், தூத்துக்குடியில் இருந்து நீடாமங்கலத்திற்கும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து உரம் ஏற்றிச்செல்லும் சரக்கு ரெயில் என தினமும் எண்ணற்ற ரெயில்கள் நீடாமங்கலம் வழியாக இயக்கப்படுகின்றன.

போக்குவரத்து நெருக்கடி

நீடாமங்கலம் வழியாக தினமும் எண்ணற்ற ரெயில்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுகிறது. ஆதலால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக நீடாமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நீடாமங்கலம் ரெயில்வே கேட், தஞ்சை சாலையில் ஒரத்தூர் ரெயில்வேகேட், ஆதனூர் ரெயில்வேகேட், நீடாமங்கலம்-திருவாரூர் சாலையில் கப்பலுடையான் ரெயில்வே கேட் என 4 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் செல்லும் நேரங்களில் இந்த ரெயில்வே கேட்டுகள் மூடப்படுகின்றன. ரெயில்வே கேட்டுகள் மூடப்படும் போதெல்லாம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

புறவழிச்சாலை திட்டம்

சில சமயங்களில் நீண்ட நேரம் ரெயில்வே கேட் மூடப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். நீடாமங்கலம் புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் திருச்சி முதல் நாகை வரையிலான நான்கு வழிச்சாலை திட்டத்தினால் புறவழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டது. நான்கு வழிச்சாலை திட்டமும் திருச்சி முதல் தஞ்சாவூர் வரை நிறைவேற்றப்பட்டது.

பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக 4 வழிச்சாலை திட்டம் இரண்டு வழிச்சாலை திட்டமாக அறிவிக்கப்பட்டு அந்த பணியும் பல்வேறு காரணங்களால் தற்போது வரை சரிவர நிறைவேறாமல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கினார். அதனைத்தொடர்ந்து தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான மதிப்பீட்டை தயாரித்து மேம்பாலம் அமைவதற்கான வரை படத்தையும் தயாரித்தனர். ரெயில்வே உயர் அதிகாரிகளும், தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களும் வரைபடத்தை கொண்டு மேம்பாலம் அமைய வாய்ப்புள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

கீழ்ப்பாலம்

அப்போது மேம்பாலம் அமைய சில ஆண்டுகள் ஆகும். ஆதலால் உடனடியாக ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே உயர் அதிகாரிகள் கூறினர். அந்த பணியும் இதுவரை நடைபெறவில்லை.

எனவே நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும். அதற்கு முன்னதாக ரெயில்வே கீழ்ப்பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.


Next Story