விவசாயிகள்-பொதுமக்களுக்கு 38 ஆயிரம் காய்கறி விதை தொகுப்பு வினியோகிக்க இலக்கு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


விவசாயிகள்-பொதுமக்களுக்கு 38 ஆயிரம் காய்கறி விதை தொகுப்பு வினியோகிக்க இலக்கு - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 5 Dec 2019 10:45 PM GMT (Updated: 5 Dec 2019 6:49 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு 38 ஆயிரம் காய்கறி விதை தொகுப்பு வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி, 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கச் செய்வதற்கும், காய்கறி மற்றும் பழங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை வீட்டுத் தோட்டத்திலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கிராமப்புற காய்கறி உற்பத்தி திட்டத்தை முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் 25 ஏக்கர் காய்கறி பயிர் சாகுபடியையும், 5 ஏக்கர் பழப்பயிர் சாகுபடியையும் அதிகப்படுத்த வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. ஒரு கிராம பஞ்சாயத்துக்கு 100 காய்கறி விதை தொகுப்பு வினியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு விதை தொகுப்பிலும் கத்தரி, வெண்டை, மிளகாய், தக்காளி, பாகற்காய், புடலை ஆகிய காய்கறி விதைகளும், காய்கறி சாகுபடிக்கு தேவையான இயற்கை உரமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு 38 ஆயிரம் காய்கறி விதை தொகுப்பு வினியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே பழமரக்கன்றுகள் தேவைக்கு, அருகில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையையோ அல்லது தோட்டக்கலை உதவி இயக்குனரையோ அணுகலாம்.

மேலும், ஒவ்வொரு விவசாயியும் தங்களிடம் உள்ள விளைநிலத்தில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பரப்பில் காய்கறிகள் மற்றும் பழப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்யலாம். இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story