தர்மபுரி மாவட்ட நீச்சல் போட்டி: 46 தங்கப்பதக்கங்கள் வென்று ஊட்டமலை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை


தர்மபுரி மாவட்ட நீச்சல் போட்டி: 46 தங்கப்பதக்கங்கள் வென்று ஊட்டமலை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
x
தினத்தந்தி 6 Dec 2019 4:00 AM IST (Updated: 6 Dec 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் ஊட்டமலை அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 46 தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.

பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி தர்மபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் நடந்தது. இப்போட்டியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், மூத்தோர், மேல் மூத்தோர், இளையோர் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை அரசு உயர் நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 46 தங்கப்பதக்கம், 16 வெள்ளி பதக்கம், 3 வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் மூத்தோர் பிரிவில் ஐஸ்வர்யா, சாய்சங்கரி என்ற மாணவிகள் 5 தங்கப்பதக்கங்களையும், இளையோர் பிரிவில் தினகரன் என்ற மாணவன் 5 தங்கப்பதக்கங்களையும் வென்றுள்ளனர். மேலும் நதியா, காமதேவி, சந்தியா, யோகராஜ், அருண், நாகராஜ், சிவமணி, ஹரி‌‌ஷ், ஸ்ரீகாந்த், தனு‌‌ஷ், நாகேந்திரன், பிரதீப், மணிகண்டன், தீபக்ராஜ், லோகே‌‌ஷ், தீபக் உள்ளிட்ட மாணவ, மாணவிகள் தங்கப்பதக்கம், வெள்ளி பதக்கம் மற்றும் வெண்கல பதக்கம் உள்ளிட்டவைகளை வென்றுள்ளனர்.

மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்ற ஊட்டமலை அரசு பள்ளி மாணவ, மாணவிகளில் 15 பேர் திருவண்ணாமலையில் நடைபெறவிருக்கும் மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரனுக்கும், பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story