நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி; அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு


நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி; அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2019 10:15 PM GMT (Updated: 5 Dec 2019 6:49 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

பென்னாகரம், 

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. எனவே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி போன்றவற்றில் தண்ணீர் கொட்டியது. இதனால் அருவிகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கியதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசல் இயக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். நீர்வரத்து குறைந்ததால் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகிறது. ஆனாலும் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது.

காவிரி ஆற்றில் நீர் வரத்தை கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்.

நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கூறியதாவது:-

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதை கேள்விப்பட்டு குளிப்பதற்காக வெளியூர்களில் இருந்து இங்கு வந்துள்ளோம். ஆனால் தண்ணீர் குறைந்த அளவே வந்தாலும் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தோம். ஆனால் பரிசலில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தோம்.

இனி வரும் காலங்களிலாவது அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இங்குள்ள முதலைப்பண்ணைக்கு சென்று கண்டு ரசித்தோம். மீன்வருவல் அருமையாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story